இப்படி எல்லாமா சாவு வரும்... கட்டில் கால் முறிந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு - திண்டுக்கல் அருகே சோகம்
கட்டிலில் போல்ட் சரியாக மாட்டப்படாததால் இரும்பு கம்பி கழுத்தை நெறித்ததில் இருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் அருகே இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தந்தை மகன் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிலில் போல்ட் சரியாக மாட்டப்படாததால் இரும்பு கம்பி கழுத்தை நெறித்ததில் இருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன்(35). இவர், அப்பகுதியில் டெய்லராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி லோகேஸ்வரி. இவர் நத்தம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கார்த்திக் ரோஷன், எஸ்வந்த் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் கார்த்திக் ரோஷனும் தந்தை கோபி கிருஷ்ணனும் எப்போதும் வீட்டின் மாடியில் உள்ள இரும்பு கட்டிலில் படுத்து தூங்குவது வழக்கம்.
அதேபோல் தாய் லோகேஸ்வரியும் இரண்டாவது மகன் யஸ்வந்த்தும் கீழ் வீட்டில் படுத்து தூங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கோபி கிருஷ்ணனும் மகன் கார்த்திக்கும் டிவி பார்த்துக் கொண்டு இரும்பு கட்டிலில் தூங்கி உள்ளனர். அப்போது மனைவி லோகேஸ்வரி மருத்துவமனைக்கு பணிக்கு செல்வதற்காக கிளம்புவதாகக் கூறியுள்ளார். வெகு நேரமாகியும் மாடியில் இருந்து வராத தனது மகனையும் கணவரையும் தேடி மேலே சென்று உள்ளார்.
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
அப்போது கணவன் மகன் இருவரும் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி லோகேஸ்வரி சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் இரும்பு கட்டில் கால்களில் உள்ள நான்கு போல்ட்டுகளும் இல்லாததால் இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் இருவரின் கழுத்துப் பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. தந்தை மகன் இருவரும் ஒரே நேரத்தில் கட்டில் கால் முறிந்து விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.