US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: உலக நாடுகள் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல்:
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை அறிய, உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவில் வாக்களிக்க மொத்தம் 18.65 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் ஏற்கனவே 7 கோடி பேர் வாக்களித்துள்ளனர். தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 50 மாகாணங்களில் இருந்து தேர்தெடுக்கப்பட உள்ள, 538 பிரதிநிதிகளில் 270 பேரின் ஆதரவை பெறுபவர் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவர். கடந்த சில தேர்தல்களில் இல்லாத அளவில், இந்த தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்கள் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஒருவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மைக்கான 270 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்காவிட்டால், அடுத்த அதிபர் எப்படி தேர்தெடுக்கப்படுவார் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை கிடைக்காவிட்டால் யார் அடுத்த அதிபர்?
பொதுமக்கள் வாக்களிக்கும் தேர்தலின் முடிவில் எந்த ஒரு வேட்பாளரும் பெரும்பான்மையைப் பெறவில்லை என்றால், புதிய அதிபர் அல்லது துணை அதிபரை தேர்ந்தெடுக்க ”தற்செயல் தேர்தல்” எனப்படும் நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் சிறப்பு வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபர் யார் என்பது முடிவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் துணை அதிபர் பதவியானது அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களின் வாக்கெடுப்பால் தீர்மானிக்கப்படுகிறது. சபையில் நடைபெறும் தற்செயல் தேர்தலின் போது, மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பிரதிநிதிகளும் வாக்களிப்பதற்கு பதிலாக, அவர்களில் பெரும்பான்மையானவர்களின் சார்பாக ஒரு பிரதிநிதி அதிபர் வேட்பாளர்களில் ஒருவருக்கு ஆதரவாக வாக்களிப்பர். அதேநேரம், செனட் உறுப்பினர்கள், துணை அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கின்றனர்.
”தற்செயல் தேர்தல்” நடைமுறை
தற்செயலான தேர்தல் செயல்முறை அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு 1, பிரிவு 3 இல் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த நடைமுறை 1804 இல் பன்னிரண்டாவது திருத்தத்தால் மாற்றப்பட்டது. இதன் கீழ் அதிக தேர்தல் வாக்குகளைப் பெற்ற மூன்று வேட்பாளர்களில் ஒருவரை பிரதிநிதிகள் சபை அதிபராக தேர்தெடுக்கிறது. அதே நேரத்தில் செனட் அதிக தேர்தல் வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்களில் ஒருவரைத் துணை அதிபராக தேர்ந்தெடுக்கிறது. அமெரிக்க வரலாற்றில் தற்செயல் தேர்தல் நடைமுறை இதுவரை மூன்று முறை நடந்துள்ளன. அதன்படி 1801, 1825 மற்றும் 1837 ஆண்டுகளில் தற்செயல் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆனால், நவீன காலத்தில் இந்த நடைமுறை ஒருமுறை கூட நடைபெற்றதில்லை.
இதனிடையே, இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு கடும் இழுபறி ஏற்பட்டால், பல மாநில தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவும், கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஆகிய இரு தரப்புகளும் தயார் நிலையில் உள்ளன.