”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
ஈழ தமிழர் விவகாரம், ராஜபக்ச, கச்சத்தீவு, விடுதலை புலிகள் பிரச்னை போன்ற இலங்கை தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்
நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இன்று அரசியல்வாதியாக புதிய அவதாரம் எடுத்து தமிழர் நலனை பேசி வரும் நிலையில், இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்றபோது அன்றைய அதிபரும் தமிழர்களின் விரோதி என்று அறியப்படுபவருமான ராஜபக்சேவிற்கு எதிரான தீர்மானத்தில் விஜய் கையெழுத்து போட மறுத்த தகவல் தற்போது மீண்டும் வெளியாகி பேசு பொருளாகியிருக்கிறது.
கையெழுத்து போட மறுத்த விஜயா தமிழர் நலம் விரும்பி ? எழும் கேள்விகள்
நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் ‘இலங்கை விவகாரத்தில் தமிழக அரசை கலந்து ஆலோசித்து வெளியுறவுக் கொள்கையை இந்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் இலங்கை தூதராக ஒரு தமிழரை நியமிக்க வேண்டும்’ என்று முக்கியமான தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கை தமிழர் நலனில் கரிசனம் கொண்டவராக விஜய் தன்னை காட்டிக்கொள்ள முயலும் சூழலில் அவர் ராஜபக்சேவிற்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்தது பல்வேறு சந்தேகங்களை இப்போது ஏற்படுத்தி வருகிறது.
அன்று என்ன நடந்தது ?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் வன்னியரசு, அன்று விஜய் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு சென்று, அவரிடம் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும் அதிபர் ராஜபட்சவிற்கு எதிராகவும் ஒருங்கிணைப்பட்டுள்ள தீர்மானத்தில் கையெழுத்து இடுமாறு கேட்டுள்ளார். ஆனால், நடிகர் விஜயோ அதை பார்த்ததும் ’I am not interested’ என்று சொல்லி அந்த தீர்மான நகலில் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில் இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சேவை தண்டிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் விஜயை கையெழுத்திட சொல்லுங்கள் என்று அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடமே வன்னிஅரசு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால், அவரோ ’இதில் விஜய் கையெழுத்துப் போட மாட்டார், நாங்கள் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம்’ என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து வன்னியரசு அன்று கொடுத்த பேட்டி இன்று சமூக வலைதளத்தில் வைராலாகி வருகிறது.
Breaking
— U2 Brutus (@U2Brutus_off) November 3, 2024
ஈழப்போராட்டத்தில் ராஜபக்சேக்கு எதிராக கையெழுத்திட மாட்டேன் என்று விஜயும் , SACம் விசிக துணை பொதுச் செயலாளர் அண்ணன் @VanniKural அவர்களிடமே நேராக சொன்ன வீடியோ வெளியாகியுள்ளது... pic.twitter.com/HrrouQ5c5S
ராஜபக்சேவிற்கு எதிராக இல்லாதவர்தான் தமிழர்களை காப்பாரா ?
இந்நிலையில், லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு எதிராக கையெழுத்து இட மாட்டேன் என்றும், எதற்காக நாங்கள் இதில் கையெழுத்து போட வேண்டும் எனவும் கேட்ட விஜய் எப்படி தமிழர் உரிமைகளை காப்பார் ? அவர் எப்படி தமிழர் நலனை முன்னிறுத்தி அரசியல் செய்ய முடியும் ? என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அவர் அரசியலுக்கு வந்துள்ளதே இன்னொரு பெரிய படம்தான் என்றும் தன்னை தமிழர்களின் காவலனாக காட்டிக்கொள்ள முனையும் விஜய், அவரது ரசிகர்களான தமிழர்களை பகடைகாயாக வைத்து அதிகாரத்தை மட்டுமே கைப்பற்ற நினைக்கிறாரா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்
விளக்கம் கொடுப்பாரா விஜய் ?
ஈழ தமிழர் விவகாரம், ராஜபக்ச, கச்சத்தீவு பிரச்னை போன்ற இலங்கை தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் வன்னியரசுவிடம் ராஜகபட்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மாட்டேன் சொன்னது ஏன் என்றும், வன்னியரசு சொல்வது உண்மைதானா ? என்றும் அவர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன