பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய கார்; இருவர் உயிரிழந்த சோகம்
விபத்தில் மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கேசவன் மற்றும் மதுரை வடிவேலன் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அடைக்கல ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள உலகப்புகழ் பெற்றது முருகன் கோயில். இக்கோயில் வழிபாட்டிற்காக உலகமுழுவதுமிருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகவும் உள்ள பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்த அலகுகுத்துதல் , காவடி எடுத்தல், மொட்டை அடித்தல் குறிப்பாக தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து பாதை யாத்திரையாக பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

தற்போது பொங்கல் பண்டிகை திருவிழா முடிந்த நிலையில் தைப்பூ திருவிழா வரவிருப்பதையடுத்து பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே போல பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் பாதயாத்திரையாக சாலை ஓரம் அதிகாலை 5 மணி அளவில் நடந்து வந்து கொண்டிருந்தனர், இந்நிலையில் திண்டுக்கல் பழைய கன்னிவாடி கரிசல் பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து மேற்படி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கேசவன், மற்றும் மதுரை வடிவேலன் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அடைக்கல ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்,

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுவன் கேசவனின் தந்தை அழகர் பலத்த காயங்களுடன் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரைக்கு வந்த பக்தர்கள் கார் மோதி பலியான சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















