கொடைக்கானல் தடாகம் அருவியில் விழுந்து மாணவர் பலி; 2 நாட்களுக்கு பின் உடல் மீட்பு
கொடைக்கானல் அருகே அருவியில் குளிக்கும்போது தவறி விழுந்த விபத்தில் மாணவன் உயிரிழப்பு . இரண்டு நாட்களுக்கு பின்பு மாணவர் உடல் மீட்கப்பட்டது.
உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏராளமான அருவிகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவற்றில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அருவியாக அஞ்சுவீடு அருவி உள்ளது. பேத்துப்பாறை அருகே உள்ள இந்த அருவியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்வது வழக்கம். இந்தநிலையில் கொடைக்கானலை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர் நேற்று அஞ்சுவீடு அருவியை பார்ப்பதற்காக சென்றனர்.
அப்போது அந்த மாணவர்கள் ஆபத்தை உணராமல் அருவிக்கு சென்று குளித்தனர். குளித்து முடித்தபிறகு மாணவர்கள் ஒவ்வொருவராக பாறை வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல் நாயுடுபுரம், பாக்கியபுரத்தை சேர்ந்த தினகரன் மகன் பிரின்ஸ் (வயது 17) என்ற பிளஸ்-2 மாணவர், அருவி தடாகத்தையொட்டி உள்ள பாறையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவர் பாறையில் இருந்து வழுக்கி தடாக நீரில் விழுந்துள்ளார். தண்ணீரில் மூழ்கிய பிரின்ஸை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அஞ்சுவீடு கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நீரில் தவறி விழுந்த மாணவனை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனே இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தடாகத்தில் இறங்கி மாணவரை தேடி பார்த்தனர். அப்போது பாறைகளின் சரிவு பகுதியில் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மியான்மர் வேலைவாய்ப்பு மோசடி..மீட்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்..2 இடைத்தரகர்களை கைதுசெய்த போலீஸ்!
பின்னர் மாணவரின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு கரை பகுதிக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கொடைக்கானல் போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அஞ்சுவீடு அருவியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம். அங்கு குளிக்கக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அபாய அருவி என்று தெரிந்தும் இளைஞர்கள், மாணவர்கள் அருவிக்கு குளிக்க செல்கின்றனர். உரிய பாதுகாப்பு வசதி இல்லாததால் அஞ்சுவீடு அருவியின் தடாக நீரில் தவறிவிழுந்து பலர் இறந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது. அருவி தடாக நீரில் தவறி விழுந்து பிளஸ்-2 மாணவர் பலியான சம்பவம் கொடைக்கானலில் சோகத்தை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்