ஊழல்வாதிகள் ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்ப்பார்கள் - அண்ணாமலை பேச்சு
தேனி மாவட்டத்தில் 2 வது நாளாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நடைபயணம்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கினார். இதனை தொடர்ந்து 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கினார். இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை பாதயாத்திரையாக சென்று மக்களை சந்தித்தார். தேனி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று மாலை கம்பம், போடியில் அண்ணாமலை பாதயாத்திரை சென்றார்.
மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசு வழங்கும் மானியங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறினார். இந்த் கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, "இந்தியா முழுவதும் எண்ணற்ற மத்திய அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். மாநில அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் வருவதில் எந்த தவறும் இல்லை" என்றார்.
பின்னர், கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகில் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல், காந்தி சிலை, பத்திரப்பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் சென்று உழவர் சந்தை அருகே பார்க் ரோடு வரை நடந்து சென்றார். இறுதியில் கூட்டத்தில் பேசியதாவது: கம்பம் கேரளாவின் குப்பை மேடாக மாறிக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் கம்பத்தில் கொட்டப்படுகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி மட்டும் தான் முக்கியம். தமிழகம் எப்படி நாசமாக போனாலும் அவருக்கு கவலையில்லை. அங்கிருக்கும் கம்யூனிஸ்டுகளை திருப்திப்படுத்த, கேரளாவின் குப்பைகள் தமிழகத்துக்கு வரும் போது அதை தடுத்து நிறுத்த தைரியம் இல்லாத ஆட்சி தி.மு.க. ஆட்சி. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தென்மாவட்டங்களை எப்போதும் வஞ்சிப்பார்கள். எப்படி இந்தியாவில் கஞ்சாவின் தலைநகர் தமிழகமாக மாறுகிறதோ, அதுபோல், தமிழகத்தில் அதிகப்படியான கஞ்சா வளர்ப்பு கம்பத்தில் இருக்கிறது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது.
கம்பம் என்பது திராட்சைக்கு பெயர் வாங்கியது. விவசாயத்துக்கு பெயர் வாங்கியது. கம்பத்தை தமிழகத்தின் கஞ்சா தலைநகராக மாற்றுவதற்கு தி.மு.க. துடித்துக் கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் ஒழிக்க வேண்டிய நேரம் உங்களுக்கு வந்து விட்டது. சாராய ஆலைகள் நடத்திக் கொண்டே டாஸ்மாக் மூடுவோம் என்று பொய் சொன்னது தி.மு.க.. இந்தி மொழியை பயிற்றுவிக்கும் பள்ளிகளை நடத்துவார்களாம். ஆனால் இந்தி திணிப்பை எதிர்ப்பார்க்கலாம். 2010-ல் நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும், காங்கிரசும். ஆனால், 2023-ல் நீட்டை எதிர்ப்பார்க்கலாம். 2011-ல் ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ், தி.மு.க. அரசு. அதன்பிறகு ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்வார்களாம். மீத்தேன் திட்டத்தை தமிழகத்தில் டெல்டா மாவட்டத்தில் கொண்டு வர கையெழுத்து போடுவார்களாம். ஆனால், மீத்தேன் திட்டம் வேண்டாம் என்று சொல்வார்களாம். உதயநிதி ஸ்டாலினின் அம்மா கோவில் கோவிலாக போவாராம்.
ஆனால், உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மம் வேண்டாமாம். இதைவிட கேடுகெட்ட கட்சியை பார்த்து இருக்கிறீர்களா? சனாதன தர்மத்தில் மட்டும் தான் ஒரு மனிதன் கடவுளாக முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள். இந்த நாட்டுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று 1971-ல் கருணாநிதி பேசியிருக்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தல் ஒரு வரலாற்று தேர்தல். உலகம் போற்றக்கூடிய உத்தமர் மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், போடி நகரில் போஜன் பார்க் முதல் வ.உ.சி. சிலை வரை அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.