மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் நீர் திறப்பு
இன்றிலிருந்து வருகிற 23ஆம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று வைகை பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 53.87 அடி தண்ணீர் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. தற்போது வைகை அணைக்கு வினாடிக்கு 16 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, மதுரை பகுதிகளின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
அதேபோல மதுரை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற அழகர் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக நடந்து வருவது வழக்கம். சித்திரை மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் தற்போது மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து வருகிற 23ஆம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று வைகை பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அணையில் உள்ள நீர்மின்நிலையம் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மதுரையை விரைவில் சென்றடையும் வகையில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை வைகை பொதுப்பணித்துறையினர் திறந்து வைத்தனர்.