LSG vs CSK: பிசிசிஐ கண்ணில் சிக்கிய கே.எல்.ராகுல் - ருதுராஜ்.. தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு.. என்ன காரணம்?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ராகுல் மற்றும் ருதுராஜ் ஆகியோருக்கு ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதம் விதித்தது.
இந்த சீசனில் முதன்முறையாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஸ்லோ ஓவர் ரேட் தொடர்பாக தவறு செய்ததற்காக தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 நாளுக்குநாள் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. ஐபிஎல் 2024 34வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ அணி சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தொயது.
இந்த போட்டியில் இரு அணிகளில் கேப்டன்களும் தவறு செய்த காரணத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படியென்ன தவறுகளை லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் செய்தார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ராகுல் மற்றும் ருதுராஜ் ஆகியோருக்கு ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதம் விதித்தது. இது ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் ராகுல் மற்றும் கெய்க்வாட் செய்த முதல் குற்றமாகும். இதன் காரணமாக இருவருக்கும் தலா 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சீசனில் இருவரும் இந்த தவறை மீண்டும் செய்தால், 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை தவறு செய்தால், அடுத்த ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம்.
கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட முதல் போட்டி இதுவல்ல. இந்த சீசனில் இதுவரை, சுப்மன் கில், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ஏற்கனவே அபராதத்தை எதிர்கொண்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பண்ட் இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டார்.
KL Rahul and Ruturaj Gaikwad have been fined 12 Lakhs each for maintaining slow overrate. pic.twitter.com/BnhPFiFVtq
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 20, 2024
போட்டி சுருக்கம்:
இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 57 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார் ரவீந்திரா ஜடேஜா. கடைசி நேரத்தில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி, வெறும் 9 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உதவியுடன் 28 ரன்களை குவித்தார். இது தவிர மற்ற சென்னை பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக எதையும் செய்யவில்லை.
லக்னோ அணி சார்பில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 2 விக்கெட்களையும், மோஷின் கான், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய் மற்றும் ஸ்டொய்னிஸ் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
பின்னர் இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 19 ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இது தவிர, குயின்டன் டி காக் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்தார். இந்த தொடக்கத்தில் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது.
சென்னை அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரானா தலா ஒரு விக்கெட்களை வீழ்த்திருந்தனர்.