தனது சின்னத்திற்கு வாக்களிக்க முடியாத தலைவர்கள் யார் தெரியுமா?
இன்றைய வாக்குப்பதிவில் தலைவர்கள் பலர் தங்களின் சொந்த சின்னத்திற்கு வாக்களிக்க முடியாத சூழலை சந்தித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், பிரபலங்கள், தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர்.
இதில், சில தலைவர்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க முடியாமல், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன்
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றியப் தொடக்கப் பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது வாக்கினை செலுத்தினார். ஆனால், அவரால் தனது கட்சிக்கு வாக்கு செலுத்த முடியாமல், அங்கு போட்டியிடும் தனது கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு வாக்கு செலுத்தினார்.
சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது. இதனால், தனது கட்சிக்கு வாக்களிக்க முடியாமல், கூட்டணி கட்சிக்கு தனது வாக்கினை பாலகிருஷ்ணன் செலுத்தினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார். அவருக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. அவர் தனது கூட்டணி கட்சியான திமுகவுக்கு வாக்கு செலுத்தினார்.