ஜப்பான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி ஏற்படும் அபாயம்
ஜப்பான் நாட்டில் சற்றுமுன் கடலுக்கு அடியில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நகரம் மியாகி. இந்த மியாகி நகரத்தில் அருகில் உள்ள பசிபிக் பெருங்கடலில் அந்த நாட்டு நேரப்படி மாலை 6 மணியளவில் கடலுக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுப்படி இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து, உடனடியாக அந்த நாட்டு அரசு மியாகி நகரத்தில் வாழும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, அந்த நகரத்தில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், கடலில் அலைகள் சுமார் 1 மீட்டர் உயரம் வரை எழும்பும் அபாயம் உள்ளதால், கடற்கரை ஓரங்களில் பொதுமக்கள், மீனவர்கள் யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 2011ம் ஆண்டு மியாகி நகரத்தில் ஏற்பட்ட சுனாமியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.