World Asthma Day: உலக ஆஸ்துமா தினம்.. குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் ஆஸ்துமா நோய்.. காரணிகள் என்ன? முழு விவரம்..
உலக ஆஸ்துமா தினம் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் இந்த நோய் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும் உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாள்பட்ட நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் இந்த நோய் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும் உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, மே 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆஸ்துமா உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இவர்களில் 38 மில்லியன் பேர் இந்தியர்கள் என கூறுகின்றனர்.
பல ஆண்டுகளாக, காற்று மாசு மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஆஸ்துமாவால் ஏற்படும் இறப்பு மற்றும் நோயின் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. டாக்டர் ரவி சேகர் ஜா, தனியார் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் யூனிட் ஹெட் ஆஸ்துமா நோய் பற்றி கூறுகையில் "இளம் வயதினர் premature death காரணமாக உயிரிழக்கின்றனர். பல குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பள்ளிப்படிப்பை முழுமையாக படிக்க முடியாமல் பாதியில் நிறுத்தி விடுகின்றனர். மேலும் சிலர் இந்த நோய் காரணமாக வேலை வாய்ப்பை கூட இழக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்துமா என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் பாதிக்கும் தொற்றா நோயாகும். இது குழந்தைகளிடையே மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். இது நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளில் இருக்கும் மாறுபாட்டால் ஏற்படுகிறது. இதன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம் மற்றும் இருமலுடன் கூடிய மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படுகிறது. இவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகிறது. முக்கியமாக ஆஸ்துமா நோய் நகரவாசிகள் மத்தியில் அதிகமாக உள்ளது. நகரத்தில் இருக்கும் மாசு காரணமாக குறிப்பாக குழந்தைகள் மத்தியில் அதிக பாதிப்பு ஏற்படுத்துகிறது.
புகைபிடித்தல் ஆஸ்துமா நோய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. காற்று மாசுபாடு, வைரஸ் தொற்று, வானிலை மாற்றங்கள் ஆகியவை ஆஸ்துமா ஏற்படுத்தும் பிற பொதுவான காரணங்களாக கருதப்படுகிறது. குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மூச்சுத்திணறல் ஏற்படும் போது சில குழந்தைகள் இன்ஹேலரை பயன்படுத்த மறுப்பதால் இந்த நோய் தீவிரமடைகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறம் இருந்தாலும் கொரோனா நோய்த்தொற்று தொடங்கியதில் இருந்து தடுப்பூசிக்கான விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் இருப்பதாகவும், இதனால் அனைவரும் தடுப்பூசிகள் முறையாக செலுத்திக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். தடுப்பூசி காரணமாக நோயின் தீவிரம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஜர்னல் ஆஃப் அலர்ஜி அண்ட் கிளினிக்கல் இம்யூனாலஜியில் வெளியிடப்பட்ட 2015 ஆய்வின்படி, ஆஸ்துமா நோயின் முக்கிய காரணமாக மாசு உள்ளது என்றும் வெளியில் இருக்கும் மாசை விட உட்புறத்தில் இருக்கும் மாசு (indoor pollution) அதிக பாதிப்பு ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய வீட்டுப் பொருட்கள், கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகள், அச்சு மாசுபாடு, துப்புரவுப் பொருட்கள் மற்றும் புகையிலை புகை ஆகியவை ஆஸ்துமா ஏற்படுத்தும் முக்கிய பாதிப்புகள் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒவ்வாமை இருப்பதால், மார்பு இறுக்கம், மூச்சுத் திணறல், மூச்சுத்திணறல் உடன் இருமல் போன்றவை முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இவை இரவில் அல்லது அதிகாலை நேரங்களில் தீவிரமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சளி, தும்மல் மற்றும் தோல் ஒவ்வாமை போன்ற பிற ஒவ்வாமையும் இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆஸ்துமா நோயை, சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால், எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )