WB post-poll violence | வெறியாட்டமான வெற்றிக் கொண்டாட்டம்: மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை.. நடந்தது என்ன?
மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான வைராக்கியப் போரின் இறுதிகட்ட வெறியாட்டம்தான், அங்கே தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்தது தேர்தல் அல்ல. தீதி மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான வைராக்கியப் போர். போரின் இறுதிகட்ட வெறியாட்டம்தான் அங்கே தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை. வங்காளத்தில் இந்தமுறை தாங்கள் வென்றே ஆகவேண்டிய அழுத்தத்தில் இருந்தது பாரதிய ஜனதா. காரணம், ஒருவேளை மம்தா பனர்ஜி வெற்றிபெற்றால் பாரதிய ஜனதாவுக்கு நிகரான பெரும்சக்தியாக மத்தியில் அவர் உருவெடுப்பார் எனக் கணித்தார்கள், அரசியல் ஆய்வாளர்கள். தேர்தலுக்காகத்தான் வாக்குச் சேகரித்த இடத்திலெல்லாம் ’கேளா ஷேஷ்’ எனப் பரப்புரை மேற்கொண்டார் மோடி. ’கேளா ஷேஷ்’ என்றால் வங்காள மொழியில் ஆட்டம் முடிந்ததென்று பொருள். இல்லை இனிதான் ஆட்டம் ஆரம்பம் ’கேளா ஹோபே’ என 213 இடங்களில் வென்று தேர்தல் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது ஆளும் திரிணமூல் காங்கிரஸ். தனது சொந்தத் தொகுதியான நந்திகிராமில் பாரதிய ஜனதாவிடம் 0.85 சதவிகித வித்தியாசத்தில் தோற்றாலும் மூன்று நாட்களில் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பதாக இருந்தார் மம்தா பானர்ஜி.
ஆனால் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருந்த வங்காளத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்ததெல்லாம் ரத்தவெறியாட்டம்தான்.திரிணாமூல் கட்சியினர் பாரதிய ஜனதா அலுவலகத்தை அடித்து நொறுக்குவதாக பாஜகவினர் புகார் செய்யத் தொடங்கினார்கள். மம்தாவுக்கு எதிராக நின்று வெற்றிபெற்ற சுவேந்து அதிகாரி தாக்கப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வலம்வரத் தொடங்கின. சில பாரதிய ஜனதா அலுவலகம் தீயிட்டுக் கொளுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
Those who talk of “Freedom of Expression” & “Upholding the Constitution” ...have made the world realise today ..how very Hypocritical they are ..how Fake are their expressions!! pic.twitter.com/jX4pH7h3W0
— Sambit Patra (@sambitswaraj) May 4, 2021
வங்காள பாஜகவின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா நான்கு பாஜகவினர் இறந்ததாகவும் 4000 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் ட்வீட் செய்தார். போலீஸ் கூட தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்று புலம்பினர். மேற்கு வங்க பாரதிய ஜனதா தலைவர் திலீப் கோஷ். திரிணாமுலும் தன் பங்குக்கு கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் கலவரத்தில் இறந்ததாக புகார் செய்தது. மேற்கு வங்காள மார்க்சிஸ்ட் அலுவலகமும் தாக்கப்பட்டதாகப் புகார்கள் வந்தன.
#FakeNewsAlert pic.twitter.com/gSAYkNPGb2
— West Bengal Police (@WBPolice) May 4, 2021
இந்தக் கலவரத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக அதிர்ச்சிகரமான புகார்கள் வந்ததை மேற்கு வங்க காவல்துறை அதிகாரப்பூர்வமாக பொய்ச்செய்தி என மறுத்துள்ளது. மாநிலம் தழுவிய இந்தக் கலவரத்தில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் இறந்த சடலங்களும் தீக்கிரையான கட்டடங்களும் டிவிட்டர் பக்கங்களில் நிரம்பி வழிகின்றன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரச் சொல்லி மாநில உள்துறைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் ஆளுநர் ஜகதீப் தன்கர்.
வன்முறை குறித்த விரிவான அறிக்கையைக் கேட்டிருக்கிறது மத்திய உள்துறை. இத்தனைக்கும் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, ‘கட்சி உறுப்பினர்களே அமைதிகாக்கவேண்டும். பாஜகவினர் உங்களைத் தாக்கினாலும் அவர்களின் தூண்டுதலுக்கு நீங்கள் பலியாகவேண்டாம்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மற்றொருபக்கம் மாநிலம் தழுவிய தர்ணாவை அறிவித்திருக்கிறது மேற்கு வங்க பாஜக., தர்ணாவை முன்னின்று நடத்த ஜே.பி.நட்டா மேற்கு வங்கம் வந்திருக்கிறார்.
The #BJP is following the 'Delhi Model'
— Agnivo Niyogi (অগ্নিভ নিয়োগী) (@Aagan86) May 4, 2021
After their massive defeat in Delhi 2020 elections, the saffron camp started a vicious fake propaganda of violence and incited riots. Same formula is being used here in #Bengal.
Requesting everyone to be alert. Do not fall for propaganda
மம்தா பானர்ஜி முதல்வர் நாற்காலிக்கு வருவது மூன்றாவது முறை. அவரைப் பொறுப்பேற்கவிடாமல் தடுக்கத்தான் பாரதிய ஜனதா இவ்வாறு செய்வதாகவும் ஒருசில புகார்கள் வருகின்றன. இதற்கு உதாரணமாக டெல்லியில் ஆம் ஆத்மியிடம் தோற்றபோது பாரதிய ஜனதா நிகழ்த்திய கலவரத்தை நினைவூட்டுகிறார்கள் புகார் அளிப்பவர்கள். ஆனால் நந்திகிராமில் மம்தா தோற்றதால்தான் அவர் கட்சியினர் இப்படிக் கலவரம் செய்கின்றனர் என்கிறது பாரதிய ஜனதா தரப்பு. ஆனால் குற்றவாளி யாரென தெரியாமல் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தும் இந்த வெறியாட்டத்தில் செத்தொழிவது ஜனமும் ஜனநாயகமும்தான்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இதுவரையில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் அம்மாநிலத்தில் 17515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 92 இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். இது இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. எட்டுகட்ட தேர்தலுக்கும் இறுதிவரை நடந்த பரப்புரைதான் இதற்கெல்லாம் காரணம் என்கின்றனர் மக்கள். தொற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய நேரத்தில் கலவரத்தைத் தூண்டுவது எந்தத் தரப்பாக இருப்பினும் அது கொரோனாவுக்கு மேலான கொலை பாதகம்.