Mamata On Pegasus : ரூ.25 கோடிக்கு பெகாசஸ் மென்பொருளை என்னிடம் விற்க முன்வந்தார்கள்.. மம்தா பேனர்ஜி
ரூ.25 கோடிக்கு என்னிடம் பெகாசஸ் மென்பொருளை விற்க முயன்றார்கள் என்று கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி.
ரூ.25 கோடிக்கு என்னிடம் பெகாசஸ் மென்பொருளை விற்க முயன்றார்கள் என்று கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி.
கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மேற்குவங்க காவல்துறையை பெகாசஸ் மென்பொருள் நிறுவனத்தினர் அணுகினர்.ரூ.25 கோடி கொடுத்தால் அந்த மென்பொருளை விற்பதாகக் கூறியுள்ளனர். காவல்துறை தலைமை என்னிடம் இதைச் சொன்னபோது நான் வேண்டாம் என மறுத்தேன் என்று கூறினார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசு சட்டவிரோதமாக ஒட்டுகேட்டதாக நாடாளுமன்றமே அதிர்ந்தது.
இந்நிலையில் மம்தா பானர்ஜியின் இந்தப் பேட்டி மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2017ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி.
இஸ்ரேலின் என்எஸ்ஓ ஸ்பைவேர் நிறுவனம் இந்தியாவுக்கு பெகாசஸ் என்ற மென்பொருளை விற்றதாகவும் அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
கடந்தாண்டு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு சென்றபோது, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என்றும், நாட்டின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பானது என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பற்றவைத்த மமதா.. இந்நிலையில் மமதா பேனர்ஜி தன்னுடைய போன் இப்போதும் ஒட்டுக்கேட்கப்படுகிறது என்றார். நான் இன்று என்ன போனில் பேசினாலும் நாளை அது மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். எனக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னரே பெகாசஸ் ஸ்பைவேர் வாங்கிக்கொள்ள ஆஃபர் வந்தது. ஆனால் நான் அதை வாங்கவில்லை. தனிநபர் உரிமையில் தலையிடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பாஜக ஆளும் பல்வேறு மாநிலத்திலும் பெகாசஸ் மென்பொருள் வாக்கப்பட்டுள்ளது என்றார்.
அண்மையில் பாஜக தலைவர் அனிர்பன் பானர்ஜி, மமதா கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்துகிறார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் மமதா இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக இதுவரை இந்திய அரசும் ஒப்புக் கொள்ளவில்லை. அதை விற்றதாக இஸ்ரேலும் ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.