பிரதமர் மோடி பேச்சை மதிக்காத இந்து அமைப்பினர்.. கலவரமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
செயிண்ட் மேரி பள்ளிக்குள் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் நுழைந்தனர். அவர்கள் அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களை அடித்து நொறுக்கினர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், அசாம் மாநிலத்தில் கிறிஸ்தவ அலங்காரங்களை இந்து அமைப்பினர் உடைத்து நொறுக்கிய சம்பவம் மிகப்பெரிய கண்டனத்தைப் பெற்றுள்ளது.
கிறிஸ்தவ மதத்தின் கடவுளான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டு இந்த பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை சில பண்டிகை சாதி, மதம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. அதில் ஒன்று கிறிஸ்துமஸ்.
பிரதமர் மோடியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இப்படியான நிலையில் டெல்லியில் இருக்கும் கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் பின்னர் தேவாலய பாதிரியார்களிடம் கலந்துரையாடினார். மேலும் சமூக வலைத்தளப் பக்கத்திலும் அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்திருந்தார். பிரதமரின் கொண்டாட்டம் அடங்கிய வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்து அமைப்பினர் அட்டகாசம்
இப்படியான நிலையில் அசாம் மாநிலத்தில் டிசம்பர் 24ம் தேதி நல்பாரி மாவட்டத்தின் பெல்சோர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பனிகான் கிராமத்தில் உள்ள செயிண்ட் மேரி பள்ளிக்குள் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் நுழைந்தனர். அவர்கள் அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களை அடித்து நொறுக்கினர். அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷமும் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ வெளியாக கடும் கண்டனங்களைப் பெற்றது.
மேலும் நல்பாரி நகரில் கிறிஸ்துமஸ் பொருட்களை விற்கும் பல்வேறு கடைகளுக்குச் சென்று ஜெயின் மந்திர் அருகே சில பொருட்களுக்கு தீ வைத்தனர். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்தியா மத நல்லிணக்கத்திற்கான நாடாக திகழும் நிலையில், இதுபோன்ற விஷயங்களை எப்படி அனுமதிக்கிறார்கள் என்ற கேள்வியைப் பலரும் எழுப்பினர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பொருட்களை சேதப்படுத்திய விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
எனினும், இந்த சம்பவத்தில் இந்த நடவடிக்கை போதாது என பலரும் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி நாட்டு மக்களையும், அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு பிரிவினரும் ஒன்றுபட்டால் நாடு வளர்ச்சி பெறும் என மேடைக்கு மேடை முழங்கி வரும் அவரின் பேச்சை இந்து அமைப்பினர் கொஞ்சம் கூட மதிக்காமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பாஜகவுக்கு பின்னடைவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டை பாழாக்கும் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்காமல் தடுக்க பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.





















