விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்த மத்திய அரசு... நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல்..!
கோடையில் விளையும் பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் பயிர்களை பல்வகைப்படுத்த ஊக்குவிக்கும் நோக்கிலும் கோடையில் விளையும் பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நெல் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 சந்தைப்படுத்தல் பருவத்திற்கான கட்டாய காரீஃப் (நெல்) பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
சந்தை விலையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகளிடமிருந்து பயிர்களை அரசாங்கம் குறிப்பிட்ட விலையில் வாங்கும். இதுவே குறைந்தபட்ச ஆதரவு விலை என சொல்லப்படுகிறது. இது விவசாயிகளுக்கு உத்திரவாதமாகவும், அதிக உணவுப் பயிரிடுவதற்கான ஊக்கமாகவும் செயல்படுகிறது.
நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டாலுக்கு (100 கிலோ) ₹ 143 உயர்த்தப்பட்டுள்ளது. பொது ரகத்துக்கு ₹ 2,183 ஆகவும், கிரேடு A ரகத்துக்கு ₹ 2,203 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உற்பத்தி செலவைவிட அதிக லாபத்தை தரும்:
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் தினை போன்ற பிற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, 4% முதல் 12% வரை பல்வேறு அளவுகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 சதவீத லாப வரம்பை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு விவசாயிகள் தங்கள் பயிர் முறைகளை பல்வகைப்படுத்தவும், அதிக மகசூல் தரும் தொழில்நுட்பங்களை பின்பற்றவும் ஊக்குவிக்கும். விவசாயிகளுக்கு நியாயமான ஊதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் அறிவிப்பின்படி, அகில இந்திய எடையுள்ள சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது பஜ்ரா (82%), அதைத் தொடர்ந்து துர் (58%), சோயாபீன் (52%) மற்றும் உளுந்து (51%) ஆகியவற்றில் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவை விட அதிக லாபத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஊட்டச்சத்து தானியங்கள்/ஸ்ரீ அன்னா போன்ற தானியங்கள் அல்லாத பயிர்களை பயிரிடுவதை இந்திய அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY) மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (NFSM) போன்ற பல்வேறு திட்டங்களால், இந்த முயற்சிகளுக்கு வலு சேர்க்கப்படுகிறது.
75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என பிரதமர் மோடி, கடந்த 2016ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.