காலிஸ்தான் பயங்கரவாதிகள்.. இந்தியாவின் கவலையை போக்க சிறப்புக் குழு - பிரிட்டன் பிரதமர்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக நேற்று காலை இந்தியா வந்தடைந்தார். இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்த அவர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக நேற்று காலை இந்தியா வந்தடைந்தார். இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்த அவர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்குள்ள கைராட்டையில் நூல் நூற்றார். பின்னர் தொழிலதிபர் கவுதம் அதானியை சந்தித்தார்.
குஜராத்துக்கு வருகை தரும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முதல் பிரிட்டன் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இரண்டாவது நாளான இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியதாவது:
காலிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. அந்தக் குழுவின் ஆதரவாளர்கள் இங்கிலாந்தில் இருந்து இயக்குவதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவின் அக்கறையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாட்டிற்கு எதிரான பயங்கரவாதம் எங்கள் மண்ணில் உருவாக நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம். காலிஸ்தான் பயங்கரவாத குழு தடுப்பிற்காக சிறப்பு பயங்கரவாத தடுப்புப் படையை பிரிட்டன் நிறுவியுள்ளது. இது இந்தியாவுக்கு நிச்சயம் உதவும் என்றார்.
On being asked about Nirav Modi, Vijay Mallya & Khalistani extremists, British PM Boris Johnson: We've a very strong view that we don't tolerate extremist groups threatening other countries, threatening India. We've set up an anti-extremist task force... to help India. (1/2) pic.twitter.com/aVoUmi9rMI
— ANI (@ANI) April 22, 2022
அதேபோல், இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் பண மோடி செய்துவிட்டு லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடி, விஜய் மல்லயா போன்றோர் தொடர்பான கேள்விக்கும் போரிஸ் ஜான்சன் பதிலளித்துள்ளார். நீரவ் மோடி, விஜய் மல்லயா ஆகியோரை நாடு கடத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. மிக நுட்பமான அந்த சட்ட சிக்கல்களை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய சட்டத்திலிருந்து தப்பிக்க எங்கள் நாட்டின் சட்டத்தை பயன்படுத்துவதை நாங்கள் ஊக்குவிக்க மாட்டோம் என்று கூறினார்.
பிரதமருக்கு நன்றி..
இந்தியப் பயணம் குறித்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தப் பயணம் சிறப்பானதாக இருந்தது. குஜராத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பு பிரம்மாண்டமாக இருந்தது. நான் சச்சின் டெண்டுல்கர் போல், அமிதாப் பச்சன் போல் மக்களால் கொண்டாடப்பட்டேன். மிக்க நன்றி எனது தோழரே (பிரதமர் மோடி) என்று பெருமிதம் பொங்க கூறினார்.