குழந்தை ஆரோக்கியமா பிறக்கனுமா..? அப்போ கண்டிப்பா ராமாயணம் படிங்க - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்..!
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் சுந்தர்காண்டம் படிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியுள்ளார்.
மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள கர்ப்பிணி பெண்கள், ராமாயணம் போன்ற இதிகாசங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று அட்வைஸ் கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் இயங்கும் சம்வர்த்தினி நியாஸ் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவரான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
"கர்ப்ப காலத்தில் சுந்தர்காண்டம் படிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது"
அப்போது, 'கர்ப்ப சன்ஸ்கார்' திட்டத்தை தொடங்கி வைத்த தமிழிசை, திட்டத்தை உருவாக்குவதில் சன்வர்தினி நியாஸின் முயற்சிகளைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "கர்ப்பத்தை நோக்கிய இந்த அறிவியல் மற்றும் முழுமையான அணுகுமுறையை செயல்படுத்துவது நிச்சயமாக நேர்மறையான முடிவுகளைத் தரும்.
கிராமங்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் நல்ல கதைகளையும் படிப்பதைப் பார்த்திருக்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணிப் பெண்கள் கம்ப ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தைக் கற்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்ப்ப காலத்தில் சுந்தர்காண்டம் படிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க அறிவியல் அணுகுமுறை உதவுகிறது. அதேபோல, கர்ப்பத்தைப் பற்றிய முழுமையான அணுகுமுறை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சியானது, கருவுற்றிருக்கும் தாய் மற்றும் குழந்தை இருவரின் உடல் மற்றும் மன நலனைக் கவனித்து, இறுதியில் சுக பிரசவத்திற்கு உதவும்" என்றார்.
தாய்மையின் முக்கியத்துவத்தையும், 'கர்ப்ப சன்ஸ்காரத்தின்' முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்து பேசினார். இதை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கீழ் இயங்கும் ராஷ்டிர சேவிகா சமிதியின் இணை தலைவர் லீனா கஹானே பேசினார்.
தேசபக்தி குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டுமா?
அப்போது, ஜிஜாபாயின் 350வது நினைவு தினத்தை முன்னிட்டு 'கர்பா சன்ஸ்கார்' திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "திட்டத்தின் அமலாக்கம் சிவாஜி மகாராஜ் போன்ற குணங்கள் கொண்ட அடுத்த தலைமுறையை கொண்டு வரும். ராஜ்மாதா என்று குறிப்பிடப்படும் ஜிஜாபாய், மராட்டியப் பேரரசை நிறுவிய சத்ரபதி சிவாஜி மகாராஜின் தாயார் ஆவார்" என்றார்.
'கர்பா சன்ஸ்கார்' திட்டத்தின் மூலம், சம்வர்த்தினி நியாஸ் அமைப்புடன் தொடர்புடைய மருத்துவர்கள், "அறிவியல் மற்றும் பாரம்பரிய" மருந்துகளின் கலவையை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவார்கள். இதனால் அவர்கள் தேசபக்தி குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள் என அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகவத் கீதை போன்ற மத நூல்களைப் படிக்க வேண்டும், சமஸ்கிருத மந்திரங்களை பாட வேண்டும் மற்றும் யோகா பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் இத்திட்டத்தின் மூலம் ஆலோசனை வழங்குவார்கள்.