Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது மகாராஷ்ட்ரா. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது. மாபெரும் வெற்றியை இந்த கூட்டணி பெற்ற நிலையில், முதலமைச்சர் யார்? என்பதை தேர்வு செய்யாமலே மகாயுதி கூட்டணி இழுத்தடித்து வந்தது. 132 தொகுதிகளை வெற்றி பெற்ற பா.ஜ.க.வுடன், 57 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு வந்தார்.
மீண்டும் முதலமைச்சர் ஆகும் பட்னாவிஸ்:
நாளை மகாராஷ்ட்ராவில் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
மகாராஷ்ட்ராவின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மகாயுதி என்ற பெயரில் பா.ஜ,க., ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்தித்தது.
ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் முயற்சி தோல்வி:
இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த சிவசேனா – பா.ஜ.க கூட்டணிக்கு காங்கிரஸ் பெரும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. மகாவிகாஸ் என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இவர்கள் மொத்தமே 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 16 தொகுதிகளையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களையும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளையும் கைப்பற்றியது.
மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் முதலமைச்சராக யார் பொறுப்பேற்பது? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த முறை சில நாட்கள் மட்டுமே முதலமைச்சர் பதவியை அலங்கரித்த பட்னாவிசையே துணை முதலமைச்சர் ஆக்கி ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் ஆனார். இந்த முறையும் அவர் முதலமைச்சராக முயற்சித்த நிலையில், அவருடன் சேர்ந்து அஜித்பவாரும் முதலமைச்சர் பதவிக்கு மல்லு கட்டினார்.
இந்த நிலையில், முதலமைச்சராக யாரைத் தேர்வு செய்வது என்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். நேற்று தேவேந்திர பட்னாவிஸ் – ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு நடைபெற்ற நிலையில் இன்று பட்னாவிஸ் முதலமைச்சராக தேர்வு) செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த பட்னாவிஸ்?
54 வயதான தேவேந்திர கங்காதரராவ் பட்னாவிஸ் 1970ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி பிறந்தவர். பட்னாவிசின் தந்தை எம்.எல்.சி. ஆவார். சட்டப்படிப்பை முடித்துள்ள பட்னாவிஸ் தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஜெர்மனியில் பட்டயப்படிப்பும் முடித்துள்ளார்.
கல்லூரி காலம் முதலே அரசியலில் ஆர்வம் காட்டி வந்த பட்னாவிஸ் ஏபிவிபி அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 27 வயதே நாக்பூரின் மேயராக பதவியேற்றுள்ளார். 1999ம் ஆண்டு முதல் மகாராஷ்ட்ராவில் உள்ள நாக்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். அந்த தொகுதியில் பா.ஜ.க.வின் அசைக்க முடியாத சக்தியாக அவர் உள்ளார். 2009ம் ஆண்டு, 2014, 2019 மற்றும் 2024 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பட்னாவிஸ் அங்கு வெற்றி பெற்றுள்ளார்.
மத்தியில் பாஜகவின் புதிய தலைமையாக உருவெடுத்து 2014ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த மோடி - அமித்ஷா நம்பிக்கையை பெற்ற தேவேந்திர பட்னாவிஸ் 2014ம் ஆண்டு முதன்முறையாக மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், கடந்த ஆட்சியில் சில தினங்கள் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக இருந்தபோது கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவர் ஆட்சி கலைந்தது. பின்னர், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது மீண்டும் மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.