நிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?
திமுக எம்.பிக்களும், அமைச்சர்களும் அடுத்தடுத்து டெல்லிக்கு படையெடுத்து அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்திப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொன்னாலும், பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக விவாதம் நடந்து வருகிறது.
அமைச்சர் கே.என்.நேரு நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லி சென்று சந்தித்துள்ளார். அப்போது ஜல்ஜீவன் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரிக்கை மனுவை கொடுத்தார். அதேபோல் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும் மரியாதை நிமித்தமாக நிர்மலா சீதாராமனை சந்தித்தாக சொல்லியுள்ளார். இவர்கள் மட்டுமின்றி திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, அருண் நேரு உள்ளிட்டோரும் நேற்று ஒரே நாளில் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர்.
நவம்பர் 25ம் தேதி அமைச்சர் பெரியகருப்பண் முதலமைச்சர் உத்தரவின்பேரில் அமைச்சர் அமித்ஷாவை சந்துத்துள்ளார். அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் திருச்சி சிவா ஆகியோர் நிதியுதவி தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துள்ளனர்.
புயலால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் திமுக அமைச்சர்களும், எம்.பிக்களும் அடுத்தடுத்து பாஜகவினரை சந்திப்பது ஏன் என எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் ரவுண்டு கட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவுவதை விட டெல்லியில் அவசரமான வேலை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதியுதவிக்காக சந்திந்துள்ளதாக திமுகவினர் சொன்னாலும், தங்கம் தென்னரசு மரியாதை நிமித்தமாக சந்தித்ததை குறிப்பிட்டு உண்மையான காரணம் என்ன என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.
அதானி விவகாரம் திமுகவுக்கு பிரச்னையாக மாறியுள்ளதால் அதனை சமாளிக்க தான் மத்திய அமைச்சர்களை சந்திக்க அடுத்தடுத்து படையெடுக்கிறார்களா என்று சமூக வலைதளங்களில் திமுகவை டார்கெட் செய்து வருகின்றனர். சோலார் எனர்ஜி ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதில் தமிழ்நாட்டின் பெயரும் அடிபட்டது. ஆனால் அதானிக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொன்னார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் அமைதியாக இருப்பது ஏன்? அதானியுடன் நடந்த ரகசிய மீட்டிங்கில் என்ன நடந்தது? என அதிமுக, பாஜக உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
புயல், மழையையும் தாண்டி மத்திய அமைச்சர்களுடன் திமுகவினர் இணக்கமாக இருப்பதன் பின்னணியில் அதானிதான் இருக்கிறாரா என விமர்சித்து வருகின்றனர்.