எல்லையில் கண்டறியப்பட்ட ட்ரோன்கள் .. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்?
இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் ஊடுருவல் அடையாளங்கள் அல்லது ஏதேனும் பொருட்கள் விட்டுச் செல்லப்பட்டதா என்பது தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன்களை அடையாளம் காணப்பட்டதாக வெளியான தகவலையடுத்து எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையான ஜனவரி 11ம் தேதி மாலை ஜம்மு காஷ்மீரின் சம்பா, ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதி இடங்களில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன் நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ட்ரோன்கள் பாகிஸ்தான் பக்கத்திலிருந்து நுழைந்து, இந்திய எல்லையில் சிறிது நேரம் வட்டமிட்டு, பின்னர் எல்லையைத் தாண்டித் திரும்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் ஊடுருவல் அடையாளங்கள் அல்லது ஏதேனும் பொருட்கள் விட்டுச் செல்லப்பட்டதா என்பது தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அதிகாரிகள், “மாலை 6:35 மணியளவில் ரஜோரியின் நவ்ஷேரா செக்டாரில் உள்ள கானியா-கல்சியன் கிராமத்தின் மீது ஒரு சந்தேகத்திற்கிடமான ட்ரோன் பறப்பது கண்டறியப்பட்டது. எல்லைக்கோட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் இதனை உறுதி செய்த பின்னர் அதனை வீழ்த்த துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதேசமயம் ரஜௌரியின் தெரியாத்தில் உள்ள கப்பர் கிராமத்தில் மற்றொரு ட்ரோன் காணப்பட்டது. ஒளிரும் விளக்குடன் கூடிய அந்த ட்ரோன் கலகோட்டில் உள்ள தர்மசல் கிராமத்தின் திசையிலிருந்து வந்து பராக் நோக்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா மாவட்டத்தில், ராம்கர் செக்டாரில் உள்ள சக் பாப்ரால் கிராமத்தின் மீது இரவு 7:15 மணியளவில் ஒளிரும் ஒளியுடன் கூடிய ட்ரோன் போன்ற ஒரு பொருள் வட்டமிட்டதும் தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் மாலை 6:25 மணியளவில் எல்லைக்கோடு வழியாக மான்கோட் செக்டாரில் உள்ள டெய்ன் திசையிலிருந்து டோபா நோக்கி மற்றொரு சந்தேகத்திற்குரிய ட்ரோன் நகர்ந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தான் இந்திய பாதுகாப்பு படையினர்தரைவழி தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ட்ரோன்கள் பெரும்பாலும் எல்லை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவோ அல்லது இந்திய எல்லைக்குள் கடத்தல் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை அனுப்பவோ பயன்படுத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் துகாப்புப் படையினர் ஆயுதக் குவியலை மீட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த ட்ரோன் சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த ஜனவரி 9ம் தேதி இரவு பாகிஸ்தானின் ட்ரோன் மூலம் வீசப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பையில் இரண்டு கைத்துப்பாக்கிகள், மூன்று பத்திரிகைகள், 16 தோட்டாக்கள் மற்றும் ஒரு கையெறி குண்டுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத இடங்கள் தகர்க்கப்பட்டது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் ட்ரோன் நடமாட்டம் குறைந்த நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 5 ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















