அட்ராசக்க! கடல்நீரிலே கரையும் ப்ளாஸ்டிக் கண்டுபிடிப்பு! இனி சுற்றுச்சூழலுக்கு நோ டென்சன்!
கடல் நீரில் மக்கும் தன்மை கொண்ட ப்ளாஸ்டிக்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ப்ளாஸ்டிக் கார்பன்டை ஆக்சைடை வெளியிடாத வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மனித குலம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை சுற்றுச்சூழல் பிரச்சினை ஆகும். இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு முக்கிய காரணிகளில் பிளாஸ்டிக்கும் ஒன்றாகும். மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சாதாரண பயன்பாடு முதல் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பயன்படுத்தப்படும் இந்த பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
கடலில் கரையும் ப்ளாஸ்டிக் கண்டுபிடிப்பு:
பிளாஸ்டிக் மனித குலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எமனாக மாறியிருப்பதற்கு காரணம் அது மக்கும் தன்மையற்றது என்பதே ஆகும். இதற்கு தீர்வு காண உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வகை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த ரிகென் என்ற ஆராய்ச்சி நிறுவனம் இதற்கு தீர்வு கண்டுள்ளனர். அவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய வகை பிளாஸ்டிக் கடல்நீரிலும் கரையும் தன்மை கொண்டது ஆகும்.
கடல்வாழ் உயிரினங்களின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறியிருப்பது பிளாஸ்டிக். ஆனால், இந்த புதிய வகை பிளாஸ்டிக் கடல்நீரில் சில மணி நேரங்களிலே கரைந்து விடும் தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண பிளாஸ்டிக் மண்ணில் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த வகை பிளாஸ்டிக் மண்ணில் 10 நாட்களுக்குள் மக்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ப்ளாஸ்டிக் புரட்சி:
இந்த பிளாஸ்டிக்கை மிகவும் வலுவாகவும், பலவற்றிற்கும் பயன்படுத்தும் வகையிலும் உருவாக்கியுள்ளனர். பேக்கேஜிங் முதல் மருத்துவ சாதனங்கள் வரை இந்த ப்ளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். இதற்கு ஏற்றவாறு இந்த ப்ளாஸ்டிக்கை வடிவமைத்துள்ளனர். இந்த ப்ளாஸ்டிக் நச்சுத்தன்மையற்றதாகவும், பல தொழில்களுக்கும் பாதுகாப்பானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார்பன் டை ஆக்சைடு:
இந்த ப்ளாஸ்டிக் சுற்றுச்சுழலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுவதால் மண்ணில் மக்கும்போது மண்ணுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை ப்ளாஸ்டிக்கின் முக்கிய நன்மை என்னவென்றால், இந்த ப்ளாஸ்டிக் மக்கும்போது கார்பன்டை ஆக்சைடை வெளியிடாத வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதே ஆகும். மேலும், இந்த ப்ளாஸ்டிக்கை மிகவும் எளிதாக மறுசுழற்சி செய்யவும் முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலப்பரப்பை காட்டிலும் பூமியில் 3 மடங்கு நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள கடல்பரப்பு அதிகளவு ப்ளாஸ்டிக்கால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய வகை ப்ளாஸ்டிக் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பயன்பாட்டிற்கு வந்தால் மிகப்பெரிய நல்ல முன்னேற்றம் சுற்றுச்சூழலில் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

