தெலுங்கானாவில் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதி
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் ஆகியவை சுமார் 6 மாதங்கள் வரை இயங்கவில்லை. இதனால், அந்தந்த நிறுவனங்களில் பணியாற்றியவர்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்தாண்டு இறுதியில்தான் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அனைத்தும் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்வி நிலையங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என்று வேதனை தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெலுங்கானா மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரமும், 25 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த நடைமுறை இந்த மாதம் முதல் கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் வரை தொடரும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.