நல்ல நீருக்காக.. காற்றுக்காக.. பலியான 13 பேர்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 4 ஆண்டுகள்!
தமிழர்கள் தங்களுக்கான நல்ல நீரைப் பெற தூய்மையான காற்றைப் பெற 13 பேரை காவல்துறையின் தோட்டாக்களுக்கு இழந்தார்கள் என்ற கருப்பு சரித்திரம் தமிழ்நாட்டின் வரலாற்றில் இனி நிரந்தரமாக இருக்கும்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுனில் உள்ள இளஞ்சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட வீடுகளுக்கு மேலே உள்ள வானம், என்றும் தனியாததொரு கோபத்துடனேயே காணப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்காகத் தன் மகள் ஒருத்தியைப் பறிகொடுத்த தாய் வசிக்கும் பகுதி அது. கோபம் பொங்க வானம் தென்படுவதில் ஆச்சரியமில்லைதான். மங்கிப்போன நீல-பச்சை நிற சுவர் ஒன்று நமக்கு அந்தப் பகுதியில் தென்படுகிறது. வீடு நெருங்க நெருங்க வனிதாவின் வீட்டில் அவரது பேரப்பிள்ளைகளுடனான சிரிக்கும் ஒலி கேட்கிறது.மருமகள் மெரிலின் பிள்ளைகள் அவர்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக் கலவரத்தில் போலீசாரின் துப்பாக்கிகளுக்கு தனது 17 வயது மகள் ஸ்னோலினைப் பறிகொடுத்த வனிதாவுக்கு தனது பேரப்பிள்ளைகள்தான் ஆறுதல். அவர்களது வீட்டின் வரவேற்பறையில் தங்கப் பிரேம் செய்யப்பட்ட ஸ்னோலினின் படம் வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு வழக்கறிஞராக ஆசைப்பட்ட ஒரு மாணவப் பேச்சாளர், ஸ்னோலின். வனிதாவின் ஒரே மகள். அவளது திடீர் மரணம் அவளை பாசத்துடன் தாங்கிய குடும்பத்திற்கு பெரும் அடியாக அமைந்தது. "ஸ்னோலின் என்னுடன் வாதிடுவார்,சண்டையிடுவார், ஆனால் அடுத்த கணம், அவள் எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடர்வாள். அவள் எல்லோரையும் பாசமாக கவனித்துக்கொள்வாள். ‘அவர்களுக்கு யாரும் இல்லை என்று நினைக்க நாம் அனுமதிக்கக் கூடாது’ என்று அவள் சொல்வாள். அவள் எல்லோர் மீதும் மிகவும் அக்கறை காட்டினாள்,” என்று 48 வயதான அவரது தாயார் நினைவு கூர்கிறார். ஸ்னோலினுக்கு ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்ட மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். கடலோர நகரத்தில் நீர் மாசுபடுவதால், தன்னுடைய நண்பர்களில் இருந்த மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மீன்பிடிப்பதற்காக வேறு இடங்களுக்குச் செல்வதையும் அவள் கவனித்து வந்தாள்” என்கிறார் வனிதா.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் பேரணியின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில் போலீசாருக்கு எதிராகவும், அப்போதைய தமிழக அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இருப்பினும், பெரும்பாலான குடும்பங்கள் இழப்பீட்டுத் தன்மை குறித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்த போராடினர். "நாங்கள் பணத்தைப் பற்றி பேசினால், பணம்தான் எங்கள் குறிக்கோள் போல அரசு நடத்துகிறது. போராட்டத்தில் இறந்த ஆண்கள் அனைவரும் வீட்டுக்காகச் சம்பாதிப்பவர்கள். அவர்கள் இல்லாமல் இந்த இழப்பீடுதான் ஒரே வருமானம். இதைச் சுட்டிக்காட்டினால் அரசு எங்களை எதிரியாகப் பார்க்கிறது. அரசாங்கம் மாறி, எங்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தால் செய்யட்டும், ”என்று அப்போது அவர் பேசியிருந்தார்.
சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்ததை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் குருதியாட்டச் சம்பவத்தின் நான்கு ஆண்டு நிறைவு இன்று. வழக்குகளை ரத்து செய்தாலும், இழப்பீடு அளித்தாலும் வாழ்நாளுக்குமான வடுவைத் தாங்கியபடிதான் இந்த மக்கள் தங்கள் அன்றாடங்களைக் கடத்துகிறார்கள். நீர் மனிதனின் உரிமை. தமிழர்கள் தங்களுக்கான நல்ல நீரைப் பெற தூய்மையான காற்றைப் பெற 13 பேரை காவல்துறையின் தோட்டாக்களுக்கு இழந்தார்கள் என்ற கருப்பு சரித்திரம் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிரந்தரமாக என்றும் நிலைத்திருக்கும்.