(Source: ECI/ABP News/ABP Majha)
Panchayat Chief Sarpanch : போதைக்கு அடிமையான தந்தை.. விடாது துரத்திய வறுமை.. சவால்களை தாண்டி பஞ்சாயத்து தலைவரான இளம்பெண்
இளம் வயதிலேயே மதுபோதைக்கு அடிமையான தந்தையை இழந்து, வறுமையின் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேறி, கல்வி மூலம் கிடைத்த தைரியத்தால் பஞ்சாயத்து தலைவராகியுள்ளார் பிரவீனா.
வாழ்க்கையில் பல சவால்களை தாண்டி சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும். அந்த வகையில், தந்தை இன்றி ஏழ்மையில் வாடிய இளம்பெண் அரசியலில் கால் பதித்து பஞ்சாயத்து தலைவராகியிருப்பது அனைவருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சவால்களை தாண்டி சரித்திரம் படைத்த இளம்பெண்:
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் சக்தாரா கிராமத்தை சேர்ந்தவர் பிரவீனா. இளம் வயதிலேயே மதுபோதைக்கு அடிமையான தந்தையை இழந்து, வறுமையின் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேறி, வேறோருவர் நிலத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்தவர் பிரவீனா.
எண்ணற்ற சவால்களை கடந்து, தற்போது 19 வயதில் ஏழு கிராமங்களின் பஞ்சாயத்து தலைவராகியுள்ளார். பலருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார். தனக்கு நேர்ந்த இன்னல்களை தனது கிராமத்தில் வாழும் மற்ற பெண்களுக்கு நேர்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். கிராம மக்களால் பபிதா என அழைக்கப்படுகிறார்.
இதுகுறித்து பிரவீனா கூறுகையில், "என் வாழ்நாள் முழுவதும் கால்நடைகளை மேய்த்தும், வீட்டு வேலைகளைச் செய்தும் வாழ்ந்த பெண்ணாக நான் இருந்திருக்கலாம். ஆனால், நான் சரியான நேரத்தில் நம்பிக்கையைக் கண்டேன். இப்போது, பள்ளிக்குச் செல்லாத எந்தப் பெண்ணையும் நான் கண்டால், எனக்கு கிடைத்த அதே நம்பிக்கையை அவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வேன்.
ஆனால், எனக்கு நம்பிக்கை கிடைப்பதற்கு முன்பு என்னுடைய வாழ்க்கை விரக்தியாக இருந்தது. கடுமையான வறுமை, ஒரு குடிகார தந்தை, நான்கு குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. 3ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. குழந்தை திருமணம் ஆகிவிடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
வாழ்க்கையை திருப்பிப்போட்ட கல்வி:
பணத்திற்காக மற்றவர்களின் கால்நடைகளை மேய்க்கும் வேலையை பார்த்தேன். அதுமட்டும் இல்லாமல், எனது வீட்டிலும் வீட்டு வேலை செய்ய வேண்டியிருந்தது" என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரவீனாவின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தது கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) பள்ளி. பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கி படிப்பதற்காக கட்டப்பட்ட பள்ளி. சக்தாரா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு களப்பணியாளர், பிரவீனாவை இலவசக் கல்வியைப் பெறக்கூடிய பள்ளிக்கு அனுப்புமாறு அவரது குடும்பத்தினரை சமாதானப்படுத்தினார். பள்ளியில் பிரவீனாவுக்கு கிடைத்த அனுபவம் அவரது வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கண்ணோட்டத்தை மாற்றியது மட்டுமல்லாமல், பெண்களுக்கான பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தையும் அவருக்குக் கற்பித்தது.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, 18 வயதில் ஒரு கட்டிடத் தொழிலாளியைத் திருமணம் செய்து கொண்டார். அவரின் மாமியார் குடும்பத்தில் மிகவும் படித்த பெண் பிரவீனாதான். இதுவே அவருக்கு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை அளித்தது.
பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது கல்விக்கு அதிகம் செய்ததாக கூறிய பிரவீனா, "நான் தேர்தலில் போராடி, பஞ்சாயத்து தலைவரானவுடன், கல்விக்காக அதிக பட்ச நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்தேன். கல்வி இல்லாமல் இருந்திருந்தால், என் வாழ்நாள் முழுவதும் கால்நடைகளை மெய்த்தபடி மணமகளாக இருந்திருப்பேன்" என்றார்.