Rahul Gandhi Case: உச்சநீதிமன்றத்திற்கு சென்ற ராகுல் காந்தி.. 2 ஆண்டு கால சிறை தண்டனை எதிர்த்து மனுதாக்கல்..!
குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
மோடி பெயரில் உள்ளவர்கள் குறித்து விமர்சித்ததற்காக அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக 2 ஆண்டு சிறை தண்டனை காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, 2 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘மோடி குடும்பப்பெயர்’ வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இன்று மனுதாக்கம் செய்தார். இந்த அவதூறு வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த சீராய்வு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 7ம் தேதி தள்ளுபடி செய்தது.
சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
மோடியின் குடும்பப் பெயரை அவதூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி தற்போது ஜாமீனில் உள்ளார். இருப்பினும் இந்த தண்டனையால் எம்.பி. பதவி ராகுல் காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி கூறிய கருத்து தொடர்பாக இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
மோடியின் குடும்பப்பெயர் பிரச்சனை என்ன?
லலித் மோடி மற்றும் நிரவ் மோடியை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, ஏன் அனைத்து திருடர்களுக்கும் ஒரே குடும்பப்பெயர் உள்ளது என்று கேட்டார். அவரது கருத்தைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்தி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த கருத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்
இந்த வழக்கில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றம், 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், அவருக்கு அன்றே ஜாமீன் வழங்கப்பட்டது, இதனால் அவர் 30 நாட்களுக்குள் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
அவரது தண்டனைக்கு ஆட்சேபம் தெரிவித்த ராகுல் காந்தி, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகி, தனது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரினார். இது ஏப்ரல் 20 அன்று நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் உயர் நீதிமன்றமும் அவரது சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.