புதுச்சேரி மாடல் என்ற புதிய வளர்ச்சி திட்டத்தை புதுச்சேரி பார்க்க இருக்கிறது - ஆளுநர் தமிழிசை
மத்திய அரசின் வழிகாட்டுதலோடு ‘புதுச்சேரி மாடல்“ என்ற புதுமையான வளர்ச்சித் திட்டத்தை புதுச்சேரி பார்க்க இருக்கிறது - ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: ‘‘பிரதமர் நரேந்திர மோடிக்கு உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் இருந்து பாதுகாப்பு, வளர்ச்சி அனைத்திலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் சென்று கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சரை புதுச்சேரி மக்கள் சார்பாக வரவேற்கிறேன். நமது நாட்டில் இன்று வரை 187,59,74,763 தடுப்பூசிகளும், புதுச்சேரியில் 16,75,271 தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கிறது. காணொளி வாயிலாக மட்டுமே கண்டவற்றை இன்று நேரடியாக பார்க்க முடிகிறது. அதற்கு தடுப்பூசிகள் தான் காரணம். நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை நாம் போட்டுக் கொள்ள மத்திய அரசு உதவியாக இருந்ததை நன்றி உணர்ச்சியோடு நினைத்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.
தொற்றுநோய் என்பது சாதாரணமானது அல்ல. மக்களின் பாதுகாப்பிற்காக தடுப்பூசியை முன்னெடுத்து சென்றதற்கு மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வணிகம், வேலைவாய்ப்பு, ஆன்மீகம், சுற்றுலா எல்லாவற்றிலும் புதுச்சேரி முதன்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாரதப் பிரதமர் பெஸ்ட் என்று தெளிவாகக் கூறினார். மத்திய அமைச்சரும் டீம் என்ற கொள்கை கொடுத்திருக்கிறார். வெளிப்படை நிர்வாகம், அதிகாரமளித்தல், தன் நிறைவு உள்ளடக்கியது. அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரண்டு கொள்கைகளும் (பெஸ்ட் – டீம்) ஒன்றாக இணைந்தால் “பெஸ்ட் டீம்“ புதுச்சேரி சிற்பாபன வளர்ச்சி அடையும்.
புதுச்சேரி அனைத்திலும் வளர்ச்சியடைந்த மாநிலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரியை வளர்ச்சி அடைந்த புதுச்சேரியாக நாம் பார்க்க போகிறோம். பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் அதற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். மத்திய அரசின் வழிகாட்டுதலோடு ‘புதுச்சேரி மாடல்“ என்ற புதுமையான வளர்ச்சித் திட்டத்தை புதுச்சேரி பார்க்க இருக்கிறது. புதுச்சேரி வேளாண்மை இணையவழி பரிவர்த்தனையில் தேசிய அளவில் விருது பெற்றிருக்கிறது. மழை போல அரசாட்சி நடைபெற வேண்டும் என்பார் திருவள்ளுவர். மத்திய அரசில் பிரதமரும், மாநில அரசில் முதல்வரும் மழையாக இருந்து வருகிறார்கள். அமைச்சர்கள் முதல்வருக்கு உற்ற துணையாக இருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்