அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் வெடித்த போராட்டம்!
இந்த பயிற்சி திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் போனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு - தேஜஸ்வி யாதவ்
இந்திய பாதுகாப்பு துறையின் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அக்னிபத் என்ற திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அதிகப்படியான இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் வகையிலும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் இளைஞர்கள் இதில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், இவர்கள் 4 ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி வீர் என அழைக்கப்படும் இந்த வீரர்களுக்கு சம்பளம், இதர படி என அனைத்து வழங்கப்படும். குறைந்தது 17 வயது முதல் அதிகப்பட்சமாக 21 வயது வரையுள்ள இளைஞர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள்.
சேவாநிதி 10 லட்சம்
அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு இதில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதன்பின் இந்த பேட்ச்சில் இருந்து 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 4 ஆண்டுகால பணிக்கு பின் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் சேவா நிதி பேக்கேஜ் வழங்கப்படும். இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்க வாய்ப்புள்ளது. முதல் ஆண்டில் சம்பளமாக ரூ.30,000 (பிடித்தம் போக ரூ.21,000), 2 ஆம் ஆண்டில் ரூ.33 ஆயிரம் (பிடித்தம் போக ரூ.23,100), 3 ஆம் ஆண்டில் ரூ.36,500 (பிடித்தம் போக ரூ.25,580), 4 ஆம் ஆண்டில் ரூ.40,000 (பிடித்தம் போக ரூ.28,000) வழங்கப்படும். பிடித்தம் செய்யப்படும் ரூ.5.02 லட்சம் சேவா நிதிக்கு செல்லும். அதே அளவு நிதியை மத்திய அரசும் செலுத்தும். இதன்மூலம் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் பயிற்சி பெறுபவர்களுக்கு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாட்டுப்பாதுகாப்பில் சமரசமா?
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் இருந்தும், முன்னாள் ராணுவ வீரர்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, இந்தியா இரண்டு முனைகளில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இது தேவையில்லாத நடவடிக்கை என்று ட்வீட் செய்துள்ளார். நமது படைகளின் கண்ணியம், மரபுகள், வீரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பாஜக அரசு நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் “அரசாங்கம் கூட ஐந்தாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். அப்படியானால் இளைஞர்களுக்கு தேசத்திற்கு சேவை செய்ய நான்கு ஆண்டுகள் மட்டும் ஏன் கொடுக்கப்படுகிறது? என அக்னிபாத் திட்டம் குறித்து நேரடியாக கேள்வியை பாஜக எம்.பி வருண்காந்தி எழுப்பி இருந்தார்.
பீகார், ராஜஸ்தானில் வெடித்த போராட்டம்
"அக்னிபத்" திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரின் பல பகுதிகளில் புதன்கிழமை ராணுவ ஆர்வலர்கள் ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். பக்சர் மாவட்டத்தில், நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, தண்டவாளத்தில் அமர்ந்து, பாட்னா செல்லும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸை அரைமணி நேரம் தடுத்து நிறுத்தினர். மேலும் பாடலிபுத்ரா வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதுடன், முர்சாப்பூரில் டயர்களை தீயிட்டு கொளுத்தி அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் ஏராளமான இளைஞர்களும், ராணுவ ஆர்வலர்களும் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக பாஜக அரசிடம் கேள்வி எழுப்பி உள்ள அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்த பயிற்சி திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் போனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
.