Governor powers: உச்சகட்ட அதிகார போட்டி... ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள்தான் என்னென்ன?
மாநில அரசு தயார் செய்த ஆளுநர் உரையில் இடம்பெற்ற பல பத்திகளை தவிர்த்து ஆளுநர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஏற்கனவே, தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்த நிலையில், வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத சம்பவம் சட்டப்பேரவையில் அரங்கேறியது.
மாநில அரசு தயார் செய்த ஆளுநர் உரையில் இடம்பெற்ற பல பத்திகளை தவிர்த்து ஆளுநர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஆளுநர் தானாக வாசித்த உரையை அவைக்குறிப்பில் இடம்பெறச் செய்யக்கூடாது எனக் கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை வாசித்து கொண்டிருந்தபோதே, ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளுநருக்கு உள்ள அதிகாரங்களை பற்றி கீழே காண்போம்.
மாநில ஆளுநரின் அதிகாரங்கள் என்னென்ன?
மாநிலத்தின் ஆளுநருக்கு என சில அதிகாரங்கள் இருக்கின்றன. நிர்வாகம், சட்டப்பேரவை உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநருக்கு என சில அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், தூதரக ரீதியாகவே ராணுவ ரீதியாகவோ, அவசர காலத்தில் குடியரசு தலைவருக்கு இருப்பது போல ஆளுநருக்கு அதிகாரங்கள் வகுக்கப்படவில்லை.
நிர்வாக அதிகாரங்கள்:
நிர்வாக ரீதியாக ஆளுநருக்கு என தனியான அதிகாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், ஆளுநர் பேரில் அமைச்சரவை எடுக்கும் அதிகாரங்கள் அவரின் அதிகாரங்களாக கருதப்படுகிறது. எனவே, ஆளுநர் பெயரளவிலான தலைவர் மட்டுமே. அமைச்சரவை குழுதான் உண்மையான நிர்வாக தலைமையாகும்.
பின்வரும் பதவிகள் ஆளுநரால் நியமிக்கப்பட்டு அவரது பதவிக்காலத்தில் பதவி வகிக்கலாம். மாநில முதலமைச்சர், முதலமைச்சரின் பரிந்துரையில் மாநிலத்தின் மற்ற அமைச்சர்கள், அரசின் தலைமை வழக்கறிஞர்.
ஒரு மாநிலத்தில் அவசரநிலையை கொண்டு வர வேண்டும் என ஆளுநரால் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்க முடியும். ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, குடியரசுத் தலைவரின் முகவராக ஆளுநர் விரிவான நிர்வாக அதிகாரங்களை அனுபவிக்கலாம்.
சட்டப்பேரவை அதிகாரங்கள்:
சட்டப்பேரவையில் ஆளுநர் அதிகாரங்களை பொறுத்தவரை இரண்டு பிரிவாக பிரிக்கலாம்.
ஒன்று மசோதாக்கள் தொடர்பானவை, மற்றொன்று சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்பானவை.
மசோதாக்கள்:
நிதி மசோதாவை தவிர வேறு மசோதாவை ஒப்புதலுக்காக ஆளுநருக்கு சமர்பித்தால் அதற்கு அவர் ஒப்புதல் வழங்கலாம், அல்லது ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துவிட்டு, மறுபரிசீலனை செய்யுமாறு சட்டப்பேரவைக்கு திரும்பி அளிக்கலாம். ஆனால், அதே மசோதாவை மாற்றம் செய்யாமல் அப்படியே ஆளுநரின் ஒப்புதலுக்காக திரும்ப அனுப்பி வைத்தால் அதற்கு அவர் ஒப்புதல் வழங்க வேண்டும். அல்லது குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம்.
இருப்பினும், நிதி மசோதாவை மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்ப முடியாது. ஏனென்றால் நிதி மசோதா பொதுவாக ஆளுநரின் முன் ஒப்புதல் பெற்ற பின்புதான் அறிமுகப்படுத்தப்படும்.
சட்டப்பேரவை அதிகாரங்கள்:
சட்டப்பேரவையை கூட்டவும் நிறுத்தி வைக்கவும் பெரும்பான்மையை இழக்கும்போது சட்டப்பேரவையை கலைக்கவும் ஆளுநருக்கு அதிகாரங்கள் உள்ளன.