3 லட்சம் போக்சோ வழக்குகள் முடித்து வைப்பு - மத்திய அரசு தெரிவிப்பு
POCSO: இந்தியாவில் 404 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 754 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 404 போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 754 விரைவு நீதிமன்றங்கள் மூலம் ஜனவரி 2025 வரை 3.06 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போக்சோ சட்டம்:
குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை தொடர்பாக, மத்திய அரசு போக்சோ சட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில் போக்சோ வழக்கு தொடர்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்ததாவது, போக்சோ வழக்குகள் தொடர்பாக நாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, மத்திய அரசு போக்சோ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், அத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில், இந்த சட்டத்தில் 2019-ம் ஆண்டில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
Also Read: ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Also Read: Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
3 லட்சம் வழக்குகள்:
பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்காக பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உட்பட விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டத்தை நீதித்துறை செயல்படுத்தி வருகிறது. உயர் நீதிமன்றங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 2025 ஜனவரி 31-ம் தேதி வரை 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 404 சிறப்பு போக்ஸோ நீதிமன்றங்கள் உட்பட 754 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் 3,06,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள், ஆலோசனைகள், பயிலரங்குகள் மூலம் போக்சோ சட்ட விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் மற்றும் தூர்தர்ஷனில் ஒரு குறும்படம் திரையிடப்பட்டது. மேலும் ஒலி ஒளிக் காட்சிகள், சுவரொட்டிகள் மூலம் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சகம் மேற்கொண்டது என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

