IEW 2023: இந்திய எரிசக்தி வாரத்தை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி! நோக்கம் என்ன?
சோலார் மற்றும் துணை எரிசக்தி மூலங்களில் ஒரே நேரத்தில் செயல்படும் ஒரு புரட்சிகரமான சூரிய சமையல் அடுப்பு மாதிரியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளை இந்திய எரிசக்தி வாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். பிப்ரவரி 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் இந்திய எரிசக்தி வாரம் நிகழ்ச்சி, இந்தியாவின் வளர்ந்துவரும் ஆற்றலை மாற்று சக்தியாக வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிநாட்டவர் பலர் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியானது, மரபு மற்றும் மரபுசாரா எரிசக்தித் துறை, அரசு மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைத்து, சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கும். இதில் உலகம் முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். 30,000 பிரதிநிதிகள், 1,000 கண்காட்சியாளர்கள் மற்றும் 500 பேச்சாளர்கள் இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு வட்டமேசை உரையாடலில் பிரதமர் பங்கேற்பார். பசுமை ஆற்றல் துறையில் பல்வேறு முன்முயற்சிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
Back in Bengaluru for #IEW2023 the confluence of global energy leaders to be inaugurated by PM @narendramodi Ji.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) February 5, 2023
A culmination of many events- #IEW curtain raiser in Bengaluru, CNG Boat Rally in Varanasi, #DanceToDecarbonise in Delhi & Methanol Blended Diesel Boat in Guwahati! pic.twitter.com/M4o8diQJuB
E20 எரிவாயு:
எரிசக்தித் துறையில், தற்சார்பு தன்மையை அடைய எத்தனால் கலப்புத் திட்டம் மீதான அரசின் கவனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தொடர் முயற்சியால், 2013-14-ல் இருந்து எத்தனால் உற்பத்தி திறன் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
எத்தனால் கலப்புத் திட்டம் மற்றும் உயிரி எரிபொருள் திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் செய்த சாதனைகள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், 318 லட்சம் மெட்ரிக் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைத்தல் மற்றும் ரூ.54,000 கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணி சேமிப்பு உள்ளிட்ட பல நன்மைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, 2014 முதல் 2022 வரை எத்தனால் விநியோகத்திற்காக சுமார் ரூ 81,800 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை இயக்கப் பேரணி
பசுமை எரிபொருட்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பசுமை இயக்க பேரணியை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பாட்டிலற்ற’ முன்முயற்சி
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘பாட்டிலற்ற’ முன்முயற்சியின் கீழ், சீருடைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு சீருடையும் சுமார் 28 பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதன் மூலம் செய்யப்பட்டது ஆகும்.
இரட்டை அடுப்பு மாதிரி
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டுப் பயன்பாட்டிற்கான சோலார் சமையல் இரட்டை-அடுப்பு மாதிரியை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இது ஒரு புரட்சிகர உட்புற சோலார் சமையல் தீர்வாகும். இது சூரிய மற்றும் துணை ஆற்றல் ஆதாரங்கள் மூலம் ஒரே நேரத்தில் வேலை செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.