"உலகின் உணவு பிரச்னையை தீர்ப்போம்" உறுதியாக சொல்லும் பிரதமர் மோடி!
விவசாயத்தை மையப்படுத்தியே இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படுகிறது என்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப 2024-25 மத்திய பட்ஜெட் தயார் செய்யப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உணவு உபரி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். 65 ஆண்டுகளுக்கு பிறகு, விவசாயப் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாடு (ICAE) இந்தியாவில் நடந்தது.
"உணவு உபரி நாடாக இருக்கும் இந்தியா" இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், "விவசாயத்தை மையப்படுத்தியே இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படுகிறது. நிலையான, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப 2024-25 மத்திய பட்ஜெட் தயார் செய்யப்பட்டது.
இது, விவசாயத்திற்கு ஒரு பெரிய உந்துதலைக் கொடுத்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, அது நாட்டின் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு சவாலான காலமாக இருந்தது.
இப்போது, உணவு உபரி நாடாக இந்தியா உள்ளது. பால், பருப்பு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது. உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை மற்றும் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக மாறியுள்ளது.
"உலகின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இந்தியா" இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகிற்கு கவலையாக இருந்த ஒரு காலம் இருந்தது. இப்போது, உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை வழங்க இந்தியா செயல்பட்டு வருகிறது.
உணவு முறை மாற்றம் குறித்த விவாதங்களுக்கு இந்தியாவின் அனுபவம் பயன் உள்ளதாக இருக்கும். நிலையான விவசாயம் மற்றும் உணவு முறைகளுக்கு முன் உள்ள சவால்களை ஒரே பூமி, ஒரு குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம் என்ற முழுமையான அணுகுமுறையின் கீழ் மட்டுமே சமாளிக்க முடியும்.
இந்திய விவசாயத்தில், 90 சதவீத விவசாயிகளுக்கு மிகக் குறைந்த நிலமே உள்ளது. மேலும், இந்த சிறு விவசாயிகள் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பின் மிகப்பெரிய பலமாக உள்ளனர். இதேபோன்ற நிலைமை ஆசியாவின் பல வளரும் நாடுகளில் பரவலாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 1,900 புதிய காலநிலை-எதிர்ப்பு வகை பயிர்களை இந்தியா வழங்கியுள்ளது. ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தை இந்தியா ஊக்குவித்து வருகிறது" என்றார்.