P20 Summit: ”சேர்ந்து முன்னேற வேண்டிய நேரம்”: சபாநாயகர்கள் உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர்; பங்கேற்ற அப்பாவு!
G20 Parliamentary Speakers' Summit: பிளவுபட்ட உலகம் நம் முன் உள்ள சவால்களுக்கு தீர்வுகளை வழங்காது என, ஜி20 அமைப்பின் 9வது நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
G20 Parliamentary Speakers' Summit: ஜி20 அமைப்பின் 9வது நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டை, டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு:
உலகின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் 20 நாடுகளின் கூட்டமைப்பு ஜி20 என குறிப்பிடப்படுகிறது. இந்த அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்றுள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் பங்கேற்ற, ஜி20 மாநாடு டெல்லியில் வெற்றிகரமாகவும், பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இந்நிலையில் அதன் ஒரு அங்கமாக ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்கும், 9வது உச்சிமாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் ஜி20 உறுப்பினர்கள் மற்றும் விருந்தினராக அழைக்கப்பட்ட நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலத்திற்கான பாராளுமன்றங்கள்” எனற தலைப்பில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.
சேர்ந்து முன்னேற வேண்டும் - பிரதமர் மோடி
140 கோடி இந்தியர்கள் சார்பாக 9வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த உங்களை வரவேற்கிறேன். இந்த உச்சி மாநாடு உலகம் முழுவதிலுமிருந்து வரும் நாடாளுமன்ற நடைமுறைகளின் மகா கும்பாபிஷேகம் போன்றது. நாடாளுமன்றங்கள் விவாதங்களை முன்னெடுக்கவும் , முடிவுகளை எடுக்கவும் முக்கிய இடமாக உள்ளது. இன்று, நாங்கள் பி20 உச்சி மாநாட்டை நடத்துகிறோம். இந்த உச்சி மாநாடு நமது நாட்டு மக்களின் சக்தியைக் கொண்டாடும் ஊடகமாக உள்ளது. ஜனநாயகத்தின் தாய் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பி20 உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#WATCH | At the 9th P20 summit in Delhi, PM Modi says, "A world full of conflicts and confrontation cannot benefit anyone. A divided world cannot give solutions to the challenges before us. This is a time for peace and brotherhood, a time to move together, a time to move forward… pic.twitter.com/XisUaVClYB
— ANI (@ANI) October 13, 2023
மோதல்கள் பலனிளிக்காது - மோடி
இன்று உலகம் எதிர்கொள்ளும் மோதல்கள் மற்றும் போர்கள் யாருக்கும் பயனளிக்காது. பிளவுபட்ட உலகம் நம் முன் உள்ள சவால்களுக்கு தீர்வுகளை வழங்காது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம். இது ஒன்றாகச் சேர்ந்து பயணிக்க வேண்டிய நேரம் என்பதோடு, ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம். இது அனைவரின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான நேரம்.
தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு:
பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை இந்தியா சந்தித்து வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் தீவுரவாதிகள் குறிவைத்தனர். தீவிரவாதம் உலகிற்கு எவ்வளவு பெரிய சவால் என்பதையும், அது மனித குலத்திற்கு எதிரானது என்பதையும் உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தின் வரையறையில் ஒருமித்த கருத்து எட்டப்படாதது வருத்தமளிக்கிறது; மனிதகுலத்தின் எதிரிகள் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த போரில் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது குறித்து உலகில் உள்ள நாடாளுமன்றங்களும் அவற்றின் பிரதிநிதிகளும் சிந்திக்க வேண்டும்” என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு:
உச்சி மாநாட்டில் இந்தோனேசியா, மெக்சிகோ, சவூதி அரேபியா, ஓமன், ஸ்பெயின், ஐரோப்பிய நாடாளுமன்றம், இத்தாலி, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, துருக்கி, நைஜீரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், எகிப்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் பேச்சாளர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதோடு, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சபாநாயகர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.