Reservation : கிறிஸ்தவ, இஸ்லாமிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுமா? மத்திய அரசு முக்கிய முடிவு..
பட்டியலினத்தவர் வேறு மதத்திற்கு மாறிய பிறகு ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவர்களை பட்டியலினத்தில் சேர்த்தால் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விசாரணை ஆணையம் ஆராய உள்ளது.
சீக்கியம், பௌத்தம் தவிர கால போக்கில் வேறு மதங்களுக்கு மாறிய தலித்துகளை பட்டியலினத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆராய இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.
Former CJI K.G. Balakrishnan to head Commission to inquire into demand for SC status to non-Hindu Dalits https://t.co/bRGp7t7bia
— The Leaflet (@TheLeaflet_in) October 7, 2022
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. 3 பேர் கொண்ட ஆணையத்தில் பேராசிரியர் சுஷ்மா யாதவ், பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலருமான ரவீந்தர்குமார் ஜெயின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நீதிபதி பாலகிருஷ்ணன் பொறுப்பேற்கும் நாளிலிருந்து இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க இரண்டு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களை பட்டியலினத்தில் சேர்க்கவும் எஸ்.சி. பட்டியலில் சேர்ப்பதற்கு மத அளவுகோல்களை நீக்கக் கோரியும் தொடரப்பட்ட மனுக்களை அக்டோபர் 11ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மத்திய அரசு, தனது நிலைபாட்டை தெரிவிக்க உள்ளது.
தற்போது, அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை, 1950 இந்து, சீக்கிய அல்லது பௌத்த சமூகங்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே பட்டியலினத்தவராக வகைப்படுத்துகிறது. இந்த ஆணை இயற்றப்பட்டபோது, தீண்டாமை காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் சமூக குறைபாடுகள் மற்றும் பாகுபாடுகளின் அடிப்படையில் இந்து சமூகங்களை பட்டியலினத்தவராக வகைப்படுத்த அனுமதித்தது. 1956ல் சீக்கிய சமூகங்களையும், 1990ல் பௌத்த சமூகங்களை பட்டியலினத்தவராக சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.
பட்டியலினத்தவர் வேறு மதத்திற்கு மாறிய பிறகு ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவர்களை பட்டியலினத்தில் சேர்த்தால் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விசாரணை ஆணையம் ஆராயும் என மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அவர்களின் மரபுகள், பழக்கவழக்கங்கள், சமூக மற்றும் பிற பாகுபாடுகள், மத மாற்றத்தின் விளைவாக அவர்கள் எப்படி மாறியிருக்கிறார்கள் என்பதை ஆராய்வது இதில் அடங்கும்.
மற்ற மதங்களுக்கு மதம் மாறியவர்களை பட்டியலினத்தில் சேர்ப்பதை தற்போது பட்டியலினத்தில் உள்ள பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மதம் மாறியவர்களை பட்டியலினத்தில் சேர்ப்பதால் ஏற்கனவே பட்டியலினத்தில் உள்ளவர்களை அது எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும் விசாரணை ஆணையம் ஆராய உள்ளது.