Kerala lottery | ஒரு கிலோ கறி வாங்க வந்த இடத்தில் ரூ.12 கோடி பம்பர் பரிசு... கேரள பெயிண்டர் வாழ்க்கையில் ‛லாட்டரி’ மேஜிக்!
வேறு யாராக இருந்தாலும், அன்று குலுக்கல் இருக்கும் சீட்டை வாங்க முன்வரமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒரு தைரியத்தில் அங்கிருந்து ஒரு சீட்டை வாங்கியுள்ளார் சதானந்தம்.
லாட்டரி சீட்டு பல குடும்பங்களை அழித்திருக்கிறது. உண்மை தான். அது போதையாக இருக்கும் வரை, சில நேரங்களில் அது ஒரு வித மேஜிக் செய்யும். அந்த மேஜிக், குடிசையில் இருப்பவரை கோபுரத்தில் அமர வைக்கும். தமிழ்நாட்டில் லாட்டரி தடை இருப்பதால், ஒரு தலைமுறையே லாட்டரி பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அண்டை மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் அடிக்கடி பல மேஜிக் நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது லாட்டரி.
இப்போது நாம் பார்க்கும் லாட்டரியும் அப்படி பட்டி ஒரு சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ரூ.12 கோடி பரிசு கொண்ட லாட்டரி விற்பனையை கேரள அரசு அறிவித்தது. ஒரு லாட்டரி சீட்டின் விலை ரூ.300. முதலில் 24 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு, விற்பனைக்கு வந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக, லாட்டரி டிக்கெட் விற்னை அமோகமாக நடந்து அனைத்தும் விற்றுத் தீர்ந்தது.
தேவை அதிகம் இருந்ததால், மேலும் கூடுதல் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு விற்கப்பட்டன. முதல் பரிசு, முன்பு கூறியது போல ஒரு நபருக்கு 12 கோடி ரூபாய். இரண்டாம் பரிசு 6 பேருக்கு தலா ரூ.3 கோடி ரூபாய். மூன்றாம் பரிசு 6 பேருக்கு தலா ரூ.60 லட்சம் என அறிவிக்கப்பட்டது தான், இந்த விற்பனைக்கு காரணம். இது தவிர இதர பரிசுத் தொகைகளும் இருந்தன.
அறிவிக்கப்பட்டவரை எல்லாம் ஓகே. ஆனால் குலுக்கல் நாளில் நடந்த சம்பவம் தான், இப்போது கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோட்டயம் மாவட்டம் ஆய்மனம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் சதானந்தம் என்பவர், இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளார். இறைச்சியும் வாங்கியுள்ளார். வீடு திரும்பும் போது, அங்கிருந்த லாட்டரி கடைக்காரர், ‛இந்த சீட்டை வாங்கிட்டு போங்க... நீங்க கோடீஸ்வரர் ஆகலாம்...’ என கூறியுள்ளார். அன்று மதியம் தான் அந்த லாட்டரி சீட்டின் குலுக்கலும் இருந்தது.
வேறு யாராக இருந்தாலும், அன்று குலுக்கல் இருக்கும் சீட்டை வாங்க முன்வரமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒரு தைரியத்தில் அங்கிருந்து ஒரு சீட்டை வாங்கியுள்ளார் சதானந்தம். வீட்டுக்கு வந்த அவர், வாங்கி வந்த இறைச்சியை மனைவியிடம் கொடுத்து சமைக்க கூறியுள்ளார். பின்னர் குடும்பத்துடன் மதியம் உணவு உண்டுள்ளனர்.
திருப்தியான விருந்து உண்ட சதானந்தவிற்கு, அதுக்கு அப்புறம் தான் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. லாட்டரி குலுக்கல் முடிந்து, பம்பர் பரிசு அறிவிப்பு வெளியானது. XG 218582 என்ற எண் கொண்ட லாட்டரி ரூ.12 கோடி பம்பர் பரிசை தட்டிச் சென்றது. இதை அறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்தார் சதானந்தம். கடன் தொல்லையில் சிக்கித் தவித்த அவருக்கு, இந்த பம்பர் லக்கி ப்ரைஸ்... வாழ்வையே மாற்றிவிட்டது.
இது குறித்து பேசிய சதானந்தம், ‛‛என்னுடைய கடன்களை எல்லாம் அடைத்துவிடுவேன். எஞ்சியிருக்கும் பணத்தை என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்கு செலவிடப் போகிறேன். இது எதிர்பாராத அதிர்ஷ்டம்,’’ என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்