100 dolphins found dead: 100 டால்பின்கள் உயிரிழப்பு - அமேசான் காடுகளில் கடுமையாக அதிகரிக்கும் வெப்பநிலை காரணமா?
100 dolphins found dead: பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் உள்ள டெஃபி (Tefe) ஏரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டால்பின் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் உள்ள டெஃபி (Tefe) ஏரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் டெஃபி ஏரிப் பகுதியில் சுமார் 100 டால்பின்கள் உயிரிழந்ததற்கு காரணம் அதிக வெப்பநிலையாக இருக்கலாம் The Mamirauá Institute என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக டால்பின்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளது.
டால்பின்கள் உயிரிழந்த இடங்களில் வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீக காலங்களில் கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. மேலும், பெரும்பாலான பகுதிகள் நிலவும் கடும் வறட்சி டால்பின்கள் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கும் என்று காலநிலை பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டால்பின்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அசாதாரணமானது என்றும் அமேசான் காட்டைச் சுற்றுயுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவு வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய நீர்வழிப்பாதையாக விளங்கும் அமேசான் காடுகளில் சமீக காலமாக வறட்சி அதிகரித்துள்ளது. இந்தப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பல்வேறு உயிரினங்களின் வாழ்வியல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பகுதிகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், எஞ்சியிருக்கும் டால்பின்களை மீட்பதும் பாதுகாப்பதும் மிகவும் சவாலாது என்று சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அமேசானில் நிலவும் வறட்சி பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள 59 மாகாணங்கள் இயல்பை விட குறைவான நீர்மட்டத்தை அடைந்துள்ளளதாக தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேசில் கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. அமேசான் நதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நதியில் உள்ள உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Mamirauá Institute ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரே கோய்லோ (Andre Coelho) இது குறித்து கூறுகையில், டெஃபி ஏரியில் உள்ள மற்ற டால்பின்களை வேறு ஏரிக்கு மாற்றுவது சிறந்த முடிவாக இருக்காது. ஏனெனில், இங்குள்ள நீரில் எதாவது பிரச்சனையிருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அதோடு, எல்லா நீர்நிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். டால்பின்கள் உயிரிழப்பிற்கான காரணம் என்னவென்று இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை. இருப்பினும், அதிக வெப்பநிலை காரணமாக இருக்கலாம். இங்குள்ள டால்பின்கள் வேறு ஏரிகளுக்கும் மாற்றப்படும் திட்டம் உள்ளது. குளிர்ந்த நீர் உள்ள ஏரி கொஞ்சம் பாதுகாப்பானதாக இருக்கலாம். “ என்று தெரிவித்துள்ளார்.
அமேசான் காடுகள் பூமியின் நுரையீரலாக செயல்பட்டு வருகிறது. அதாவது 20% ஆக்ஸிஜன் வாயுவை வெளியிடுகிறது. இந்தச் சூழலில் கடும் வெப்பநிலை உயர்வு காரணமாக அங்கு ஏற்படும் காட்டுத் தீ,வறட்சி உள்ளிட்டவைகளால், அங்கு இருந்து வரும் ஆக்ஸிஜன் வாயுவின் அளவு குறையும் அபாயம் ஏற்படும். இதற்கு பருவநிலை மாற்றம் இதற்கு முதன்மையான காரணம் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.