Manipur Violence: மணிப்பூர் விவகாரம்.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று போராட்டம் - மோடிக்கு நெருக்கடி..!
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டதில் ஈடுபட உள்ளனர்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டதில் ஈடுபட உள்ளனர்.
முடங்கிய நாடாளுமன்றம்:
மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நாடாளுமன்றத்திலும் அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரத்தை விவாதிக்க வேண்டும் என மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முழுமையாக முடங்கியது.
எதிர்க்கட்சிகள் போராட்டம்:
பழங்குடியின பெண்களுக்கு எதிரான கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், அங்கு நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து, பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகும் வண்ணம் உள்ளன. இந்நிலையில், வார இறுதி விடுமுறையை தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் திட்டம்:
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கூட்டம் முடிந்ததும், நாடாளுமன்ற அவைக்குள் நுழைவதற்கு முன்பு காந்தி சிலை அருகே எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்த உள்ளனர். மணிப்பூர் பிரச்னை குறித்து குறுகிய விவாதம் நடத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அதற்கு, உள்துறை அமைச்சர் பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமரே விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. அதேபோல, நேரக்கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து கட்சிகளையும் பேச அனுமதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் வியாழக்கிழமை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு:
எதிர்க்கட்சியினரின் அமளிக்கு மத்தியில் மக்களவையில் பேசி இருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "மணிப்பூரில் நடந்தது மிக மோசமான சம்பவம். இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். மணிப்பூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இதை அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் நான் கூறியிருந்தேன். மணிப்பூர் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஆனால், ஒரு சில அரசியல் கட்சிகள் தேவையில்லாமல், மணிப்பூர் பற்றிய விவாதத்தை நடத்த விடாத சூழ்நிலையை உருவாக்க விரும்புவதை நான் காண்கிறேன். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இருந்திருக்க வேண்டிய தீவிரம் அவர்களிடம் இல்லை என்று நான் தெளிவாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன்" என்றார்.