(Source: ECI/ABP News/ABP Majha)
ஒடிசா ரயில் விபத்து... ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...! முழு விபரம்
பாலசோர் அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) நிலையத்தில் விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலசோர் அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) நிலையத்தில் விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:
இந்திய தண்டனைச் சட்டம், 337, 338, 304A (ஜாமீனில் வெளிவர முடியாதது) மற்றும் 34 (அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள்) ஆகிய பிரிவுகளின் கீழும் ரயில்வே சட்டம் 153, 154 மற்றும் 175 (பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய பிரிவுகள் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாலசோர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோர விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைவதற்கு காரணமான இந்த விபத்து, இந்திய ரயில்வே வரலாற்றில் மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது.
விபத்து எப்படி நடந்தது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட குறைபாடு, அதி வேகமாக ரயில்கள் இயக்கப்பட்டதே ரயில் விபத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரயில்வே நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது.
"இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம்"
ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார். அது முடிவடைந்து விசாரணை அறிக்கை வந்து சேரட்டும். முன்னதாக விபத்திற்கான காரணம் என்ன காரணமானவர்கள் யார் என்ன என்பது குறித்து கண்டறிந்துள்ளோம்.
ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம். தற்போதைக்கு இந்த பாதையில் போக்குவரத்தை சீர் செய்வது தான் எங்களது முக்கிய நோக்கமாக உள்ளது" என்றார். ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு ரயில்களின் திசையை மாற்றுவதற்காக மின்னணு இண்டர்லாக்கிங் முறை பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல, விபத்தில் சிக்கிய ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படவிலலை என ரயில்வே போர்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து ஹவுராவிற்கும், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஹவுராவிலிருந்தும் வந்து கொண்டிருந்தது.
இரண்டு பிரதான லைனிலும் சிக்னல் பச்சை நிறத்தில் இருந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 128 கிமீ வேகத்திலும், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 126 கிமீ வேகத்திலும் சென்று கொண்டிருந்தது. இதன் வரம்பு மணிக்கு 130 கிமீ ஆகும். எனவே, இரண்டு ரயில்களும் அதிவேகமாக இயக்கப்படவில்லை" என்றார்.