ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இனி கவலை வேண்டாம்! ATM வசதி அறிமுகம்: முழு விபரம் இதோ!
புதிய அறிமுகமாக வரவுள்ள ATM வசதியானது ஒருபக்கம் பயணிகளுக்குச் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல், ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாயையும் ஈட்ட உதவும்.
பேருந்து, கார் என சொகுசாக பயணம் செய்தாலும் ரயிலில் பயணம் செய்வது போன்ற வசதி இருக்காது. அடிப்படை வசதிகளோடு பாதுகாப்பும் உள்ளதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கவே விரும்புவார்கள். அந்த வகையில் தினந்தோறும் பல கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே ரயில் பயணிகளுக்கு வசதிகளை அதிகரித்து கொடுக்கும் வகையில் புதிய, புதிய திட்டங்களையும் ரயில்வே நிர்வாகமும் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பயணிகள் நினைத்துப் பார்க்காத ஒரு முக்கிய வசதியை இந்தியன் ரயில்வே தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி என்னவென்றால் நீண்ட தூர செல்லும் ரயில்களில் ATM இயந்திரம் நிறுவப்படும். ஆம், இனி நாம் நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்வோம் என்றால் கையில் அதிக அளவு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. ரயிலில் நமக்கு தேவைப்படும் நேரத்தில் ATM இயந்திரத்தில் இருந்து பணத்தை எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்தியன் ரயில்வே (Indian Railways) தற்போது அறிமுகம் செய்துள்ள இந்தச் சிறப்பு வசதியின் மூலம் ரயில் பயணிகள் சுலபமாகப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, அவசர நேரத்தில் பணத்திற்காக எங்கும் அலைந்து திரியாமல் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ரயில்வே தற்போது இந்த வசதியை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. மகாராஷ்டிராவின் மன்மாட் மற்றும் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT - Chhatrapati Shivaji Maharaj Terminus) இடையே இயங்கும் பஞ்சவதி எக்ஸ்பிரஸில் (Panchvati Express) இந்த ATM வசதி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ATM வசதியானது ஒருபக்கம் பயணிகளுக்குச் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல், ரயில்வேக்கு வருவாயையும் ஈட்ட உதவும்.
அதுமட்டுமின்றி, இந்தச் சோதனை வெற்றியடைந்தால், இந்த வசதியானது மற்ற ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்தச் சிறப்பு வசதியானது அடுத்த கட்டத்தில், விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ், அமர்நாத் எக்ஸ்பிரஸ், எல்டிடி எக்ஸ்பிரஸ் மற்றும் ஆங் எக்ஸ்பிரஸ் (Vikramshila Express, Amarnath Express, LTD Express and Anga Express) போன்ற நீண்ட தூர ரயில்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே முன்னதாகத் தெரிவித்திருந்தது. இந்த வசதி "ATM ON WHEELS" என்று அழைக்கப்படுகிறது.
இந்த ATM இயந்திரம் (ATM Machine) ரயில் பெட்டிகளின் பின்புறத்தில் அமைந்துள்ள மினி பேன்ட்ரிகளை (Mini Pantry) மாற்றியமைத்து நிறுவப்படும். அதன்படி, மினி பேன்ட்ரிகள் மாற்றியமைக்கப்பட்டு, ரப்பர் பேட்களில் நட்டுகள் மற்றும் போல்ட்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம்கள் நிறுவப்படும். ரப்பர் பேண்டுகள், ரயில் அதிர்வுறுவதைத் தடுக்க உதவும். அதுமட்டுமின்றி, அசம்பாவிதங்களைத் தவிர்க்க இப்பகுதியில் இரண்டு தீயை அணைக்கும் கருவிகளும் நிறுவப்படும். இந்தியன் ரயில்வேயின் கூற்றுப்படி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்களில் நிறுவப்பட்டுள்ள ATMகள் ஷட்டர்களால் மூடப்பட்டிருக்கும். இந்த அம்சம் ஏற்கனவே பஞ்சவடி எக்ஸ்பிரஸில் செயல்படுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மற்ற ரயில்களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















