Mukesh Ambani | அம்பானி வீட்டருகே வெடிபொருள் கார் : போலீஸ் அதிகாரி சுனில்மானே நீக்கம்
நாட்டின் முதல் பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருள் கார் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரத்தில், நான்காவதாக போலீஸ் அதிகாரி சுனில் மானே வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே, விநாயக் சிண்டே எனும் போலீஸ் காவலர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து போலீஸ் உதவி ஆய்வாளர்கள் சச்சின் வாஸ், ரியாசுதீன் காஸி ஆகியோர் வேலையிலிருந்து நிரந்தர நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் சச்சின் வாஸ்தான் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். நான்கு பேரையும் தேசிய புலனாய்வு முகமை- என்.ஐ.ஏ. கைதுசெய்து, அவர்கள் மீதான வழக்குகளில் விசாரணை நடத்திவருகிறது.
கடந்த மார்ச்சில், தெற்கு மும்பையில் அண்டிலியா பகுதியில் உள்ள அம்பானியின் வீட்டருகே கடந்த பிப்ரவரி 25 அன்று வெடிபொருள்களுடன் ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் காரின் உரிமையாளர் அதே மாநிலத்தைச் சேர்ந்த தானே மாவட்டத்தின் தொழிலதிபர் ஹிரண் மன்சுக் என்பது தெரியவந்தது. மார்ச் 5 அன்று மன்சுக் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரண்டு சம்பவங்கள் மகாராஷ்டிர காவல்துறைக்கு சவாலாக மாறியது.
மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் படை இது தொடர்பான வழக்குகளை விசாரித்தத்து. அதேசமயம், தேசிய புலனாய்வு முகமையும் இதைப் பற்றி தனியாக விசாரணையைத் தொடங்கியது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இது குறித்து பகிரங்க மோதலும் எழுந்தது. பின்னர் தேசிய முகமையிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. கொலைசெய்யப்பட்ட தொழிலதிபர் மன்சுக்கின் குடும்பத்தினர், ஆய்வாளர் சச்சின் வாஸ் மீது சந்தேகம் தெரிவித்தனர். அந்தப் பொறியை வைத்துதான் இந்த விவகாரத்தில் துப்பு துலங்கப்பட்டது.
விசாரணையில், போலீஸ் உதவி ஆய்வாளர் சச்சின் வாஸ்தான் வெடிபொருள் காரை நிறுத்தியதிலும் அதையொட்டி தொழிலதிபரைக் கொலைசெய்ததிலும் முக்கிய பின்னணி என்பதை மோப்பம் பிடித்தனர். அடுத்தடுத்த விசாரணைகளில் அவரும் இன்னொரு காஸியும் சேர்ந்து, அந்தக் காரைக் கொண்டுசென்று அங்கு நிறுத்திய வழித்தடத்தில் உள்ள பல கண்காணிப்பு கேமிராக்களை உடைத்து நாசமாக்கினர் என்கிறது தேசிய முகமையின் புலனாய்வு ஆவணம்.
Mohan Ranade | யார் இந்த மோகன் ரானடே, இவருக்கும் தமிழ் நாட்டுக்குமான பிணைப்பு என்ன?
தன்னை சூப்பர் போலீஸாக ஒரு பக்கம் காட்டிக்கொண்டு, பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்வதுதான் வாஸின் பழக்கம் என்பதையும் விசாரணைப் படை கண்டுபிடித்தது. அவர் விசாரித்த அனைத்து வழக்குகளிலும் இன்னொரு உதவி ஆய்வாளர் ரியாசுதீன் காஸி அவருடன் இணைந்து செயல்பட்டுள்ளார். மிகவும் அணுக்கமாக இருந்த அவரை, இதிலும் சச்சின் வாஸ் பயன்படுத்தியுள்ளார். முதலில் காஸியை சாட்சியாக ஆக்குவதென தேசிய முகமை முடிவுசெய்தது. ஆரம்பம் முதல் இந்த விவகாரத்தை நன்கறிந்த நபர் என்பதைவிட, முக்கிய பங்கும் வகித்தவர் என்பது பின்னர் தெரியவந்தது. காஸியை வைத்தே சச்சின் வாஸின் பலே பின்னணியை தேசிய முகமைப் படையினர் எளிதாகக் கண்டுபிடித்தனர்.
மார்ச் 13-ஆம் தேதி சச்சின் வாஸும் ஏப்ரல் 11 அன்று காஸியும் கைதுசெய்யப்பட்டனர். இருவரும் முதல் கட்டமாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நிரந்தர நீக்கம் செய்யப்பட்டனர்.
முக்கிய பதவிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சச்சின் வாஸ், வாழ்க்கையை நடத்திவந்திருப்பது இந்த வழக்கில் வெளிச்சத்துக்கு வந்தது. ஓபராய் ஓட்டலில் 100 முறைகளுக்கும் மேல் வெவ்வேறு பெயர்களில் இவர் தங்கியதும் அவருக்கு தரப்பட்ட அலுவல் துப்பாக்கியில் ஏகப்பட்ட குண்டுகளை அனுமதியில்லாமல் சுட்டுத் தீர்த்திருப்பதும் புலனாய்வில் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. தொழிலதிபர்களை மிரட்டி பணம்பார்த்த குற்றச்சாட்டு இவர் மீது கடைசியாக சுமத்தப்பட்டது. அதிலிருந்து தப்பித்து நல்ல பெயர் எடுக்கவும் சூப்பர் போலீஸாகக் காட்டிக்கொள்ளவும் இரண்டு சம்பவங்களையும் சச்சின் வாஸ் நிகழ்த்தினார் என்பதும் தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணையில் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
இவருடைய சதித் திட்டத்துக்கு பலியான தொழிலதிபர் மன்சுக் படுகொலையில், ஆய்வாளர் சுனில் மானே உதவிசெய்தார் என்பது குற்றச்சாட்டு. அதன்படி இவர் கடந்த ஏப்ரலில் கைதுசெய்யப்பட்டு, பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். ஜூன் முதல் தேதியன்று இந்திய சாட்சிய சட்டப்படி அவரை நிரந்தரப் பணிநீக்கம் செய்வதாக மும்பை போலீஸ் ஆணையர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது.