பிரதமர் மோடி ஆளுநர்களுடன் 14-ந் தேதி ஆலோசனை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடி வரும் 14-ந் தேதி அனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, மகாராஷ்ட்ரா, குஜராத், டெல்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாகவே, தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் அதிகமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1.68 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் 14-ந் தேதி( நாளை மறுநாள்) அனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார். பிரதமர் மோடி ஏற்கனவே அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.