சாதி/மத மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் விவரம் சேகரிக்கும் பாஜக அரசு? முழு விவரம்
13 பேர் கொண்ட குழுவை அமைத்து, கலப்பு மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளின் விவரங்களை சேகரிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

கலப்பு மற்றும் சாதி மறுப்பு திருமணங்கள் நடப்பது ஒப்பிட்டளவில் தற்போது அதிகரித்து வந்துள்ளது. நகரமயமாக்கல், இளம் தலைமுறையினரின் மன நிலை மாறி இருப்பது, காதல் திருமணங்கள் செய்து கொள்வது அதிகரித்திருப்பது ஆகியவை இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
பெற்றோர் செய்து வைக்கும் திருமணங்களை போலவே காதல் திருமணங்களிலும் தம்பதிகளுக்கிடையே பிரச்னை ஏற்படுவது இயல்பு. ஆனால், காதல் திருமணங்கள் மட்டுமே பெரும்பாலும் பிரச்னையை எழுப்புவதாகவும் விவாகரத்தில் முடிவதாகவும் ஒரு கருத்து சமூகத்தில் நிலவி வருகிறது.
உண்மை என்னவோ எந்த திருமணம் செய்து கொண்டாலும் தம்பதிகளுக்கிடையே ஒரு மித்த கருத்து நிலவவில்லை என்றால் அது பிரச்னையில்தான் முடியும். இச்சூழலில், டெல்லியில் நடைபெற்ற ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
இதில், காதலரும் காதலியும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் சிலர் சர்ச்சையை கிளப்பியிருந்தனர்.
இந்நிலையில், 13 பேர் கொண்ட குழுவை அமைத்து, கலப்பு மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் விவரங்களை சேகரிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பட்சத்தில் அவர்களின் விவரங்களை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஷ்ரத்தா வால்கர் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசு பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்ட அதிகாரிகளுடன் வழக்கமான கூட்டங்களை நடத்தி, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கலப்பு மற்றும் சாதி மறுப்பு திருமணங்கள் பற்றிய தகவல்களை இக்குழு சேகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அதிகாரிகளுடன் அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்படுவதை தவிர்த்து, அரசு மற்றும் அரசு சாரா துறைகளைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பான சட்டங்கள், மத்திய மற்றும் மாநில அளவில் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஆய்வு செய்வார்கள்.
இதுகுறித்து ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு விரிவாக பேட்டி அளித்த லோதா, "ஷ்ரத்தா வால்கர் சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதற்காகவே மாநில அரசு இந்தக் குழுவை அமைத்துள்ளது.
சில சமயங்களில் பெண்களின் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதுபோன்ற சமயங்களில், எங்கள் குழு உறுப்பினர்கள், ஆலோசகர்களின் உதவியுடன், குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, தொடர்பை மீண்டும் தொடங்குவதற்கும், அவர்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கும் ஆலோசனை வழங்குவார்கள்.
ஷ்ரத்தா வாக்கரின் விஷயத்தில், அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது அவரது குடும்பத்தினருக்குத் தெரியாது. இதை கேட்கவே பயமாக இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை.
விவாகரத்துக்குச் செல்லும் தம்பதிகள் ஒன்றாக வாழ்வதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்வதற்கு நாங்கள் ஆலோசனை வழங்குவது போல, குடும்பத்தை விட்டுப் பிரிந்த பெண்களுக்கு மீண்டும் தொடர்பைத் தொடர குழு ஆலோசனை வழங்கும்" என்றார்.
இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. இது, தேவையற்ற குழு என்றும் பிற்போக்கான நடவடிக்கை என்றும், மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை உளவு பார்க்க ஏக்நாத் ஷிண்டே-தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசுக்கு உரிமை இல்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து விலகி இருக்குமாறு மாநில அரசை கேட்டுக் கொள்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான ஜிதேந்திர அவாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "சாதி/மத மறுப்பு திருமணங்களைத் தடுக்கும் கமிட்டியின் இந்தக் குப்பை குழு எதற்கு? யார் யாரை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை உளவு பார்க்க அரசு யார்?
தாராளவாத மனோபாவம் கொண்ட மகாராஷ்டிராவில் இது ஒரு பிற்போக்கான முடிவு. குமட்டல் நடவடிக்கை. எந்த வழியில் முற்போக்கான மகாராஷ்டிரா செல்கிறது. மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து விலகி இருங்கள்" என பதிவிட்டுள்ளார்.





















