கேள்வி கேட்டா முதுகை உடைப்பேன்...சாமானியன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாத அமைச்சர் மிரட்டல்..!
சமீப காலமாக, திமுக அமைச்சர்கள் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அப்படி நடந்து கொள்வதில்லை. குறிப்பாக, விஐபி கலாசாரம் காரணமாக அரசியல்வாதிகள் பொதுமக்களை நடத்தும் விதம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
சமீப காலமாக, திமுக அமைச்சர்கள் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாற்காலி எடுத்து வர தாமதமானதால் பால்வளத்துறை அமைச்சர் நாசர், கட்சி நிர்வாகி ஒருவர் மீது கல் வீசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதேபோல, உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு, நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் அமர்ந்திருத்த அமைச்சர் உதயநிதியை பார்க்க வந்த தொண்டரியம் கடுமையாக நடந்து கொண்டார்.
இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு வரும் நிலையில், மத்திய பிரதேசத்தில் கேள்வி எழுப்பிய சாமானியன் ஒருவரிடம் மிரட்டும் விதமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் விஜய் ஷா நேற்று முன்தினம் கந்த்வா மாவட்டத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, ஒரு நபர் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு, அவர் மோசமாக நடந்து கொண்டார்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கூட்டத்தை சீர்குலைக்க காங்கிரஸ் கட்சியினர் பார்வையாளர்களில் ஒருவரை குடிக்க வைத்துவிட்டு அனுப்பியதாக குற்றம்சாட்டுவது பதிவாகியுள்ளது.
"மத்தியப் பிரதேசத்தில் வளர்ச்சியை நாங்கள் தொடங்குகிறோம். இங்கே பிரச்னையை உருவாக்க முயற்சிக்கும் அனைவரையும் பூட்டி வைப்போம். இது அரசாங்கக் கூட்டம். இதற்கு இடையூறு விளைவிப்பவரின் இடுப்பை காவல்துறையினரை வைத்து உடைப்போம்" என அமைச்சர் பேசியுள்ளார்.
அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் தனது மனைவிக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வரவில்லை என்று கூறிய ஒருவரிடம் வனத்துறை அமைச்சர் இப்படி ஆவேசமாக நடந்து கொண்டுள்ளார். அவர் இந்த பிரச்னையை அமைச்சர் முன்பு சுட்டி காட்டியபோது, அவர் குடித்துவிட்டு கூட்டத்தை சீர்குலைப்பதற்காக காங்கிரஸ் கட்சியினரால் அனுப்பி வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
பின்னர், கூட்டத்தில் மதுபானம் விற்பவர்களை கைது செய்யுமாறு அமைச்சர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
மத்திய பிரதேசத்தில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இடையில் இரண்டு ஆண்டுகளை தவிர்த்து பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்திற்கு சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது. அந்த வகையில், ஆட்சியில் மேற்கொண்ட நல திட்டங்கள் குறித்து மக்களிடையே வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விகாஸ் ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.