அதானி துறைமுகத்திற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்...தாக்கப்பட்ட காவல் நிலையம்...நடந்தது என்ன?
கட்டப்பட்டு வரும் அதானி துறைமுகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்கக் கோரி, ஏராளமான மக்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் விழிஞ்சம் நகரில் அதானி துறைமுகத்தை அமைக்க கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இவை, கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், கடலோர அரிப்பு ஏற்படும் எனக் கூறி, உள்ளூர் மக்கள் மற்றும் மீனவர்கள் துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கு மத்தியில், துறைமுகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கட்டப்பட்டு வரும் அதானி துறைமுகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்கக் கோரி, ஏராளமான மக்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, பெண்கள், குழந்தைகள் உட்பட 3,000க்கும் மேற்பட்டோர் மீது கேரள போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்தனர்.
மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விழிஞ்சம் காவல் நிலையம் மீது நேற்று இரவு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், போராட்டக்காரர்கள் ஸ்டேஷனை அடித்து நொறுக்கியதாகவும், போலீஸ்காரர்கள் காயமடைந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
அதானி குழுமத்தால் அமைக்கப்பட்டு வரும் துறைமுக திட்டப் பகுதிக்கு கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகளை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவுப்படி 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் துறைமுக திட்டத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கியதாக கூறப்படுகிறது.
துறைமுகத்தால் கரையோர அரிப்பு ஏற்படுவதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க பாதிரியார்களால் வழிநடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, துறைமுகத்தின் நுழைவாயிலில் தடுப்பை ஏற்படுத்தி தங்குமிடத்தை அமைத்து, கடந்த மூன்று மாதங்களாக கட்டுமானப் பணிகளை நிறுத்தினர்.
திருவனந்தபுரம் லத்தீன் மறைமாவட்ட பேராயர் உட்பட மீனவர்கள், பாதிரியார்கள் மீது கொலை முயற்சி, கலவரம், அத்துமீறல், குற்றவியல் சதி மற்றும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 100க்கும் மேற்பட்டவர்களில் குறைந்தது 15 பேர் லத்தீன் கத்தோலிக்க பாதிரியார்கள் எனக் கூறப்படுகிறது. திட்டப் பகுதிக்கு பாறைகளை ஏற்றிச் சென்ற 25 லாரிகளை திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. துறைமுக தளத்தில் இருந்த மேலும் 25 லாரிகள் வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து துறைமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், இது கல் வீச்சு உள்ளிட்ட வன்முறை மோதல்களுக்கு வழிவகுத்தது. இதில் பல போலீசார் உட்பட பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.