Kaza health protocols: யாரா இருந்தாலும் ரூல் இதுதான்... - சுயக்கட்டுப்பாட்டால் கொரோனாவை எதிர்த்து நிற்கும் காசா!
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள காசா என்ற கிராமம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவின் தீவிர தாக்குதலில் சிக்காமல் தப்பித்துவருகிறது.
உலகளவில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 16 கோடியே 3 லட்சத்து 7 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 30 ஆயிரத்து 361 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 677 ஆக உள்ளது. ஒரு கோடியே 89 லட்சத்து 29 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 288 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அமெரிக்கா, பிரேசிலில் குறைந்து வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஆனால் என்னதான் அரசு ஊரடங்கு, கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களாய் பார்த்து கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும் என்பது அரசின் பொதுவான கருத்தாகவும் உள்ளது. அப்படி தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா பரவலை தீவிரமாக கட்டுப்படுத்தியுள்ளது இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம். அங்குள்ள காசா என்ற கிராமம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவின் தீவிர தாக்குதலில் சிக்காமல் தப்பித்துவருகிறது.
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள காசா, மிகச்சிறந்த சுற்றுலாத்தளம்.பள்ளத்தாக்கு, ஆறு, பனி, குளிர் என இயற்கையின் பிடியில் இருக்கும் காசா, தற்போது கொரோனா பிடியில் சிக்காமல் தற்காத்துக்கொண்டு இருக்கிறது. அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் போக, தங்கள் ஊருக்குள் புதிதாக யார்வந்தாலும் கொரோனா பரிசோதனை முக்கியம் என்பது காசாவின் அன்புகட்டளை. கட்டாயமும் கூட. பக்கத்து ஊர்க்காரராக இருந்தாலும் அதுதான் கட்டளை. மருத்துவ உதவிகளும், சுகாதார கட்டமைப்புகளும் சற்று பின் தங்கி இருந்தாலும் கூட கட்டுப்பாட்டில் விடாப்பிடியாக இருக்கிறது காசா. தற்போது காசாவுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளது. ஆனால் கட்டிட வேலைக்காக பீகார்,ஜார்க்கண்டில் இருந்து தொழிலாளர்கள் வருகை தருகின்றனர். யார் வந்தாலும், கொரோனா பரிசோதனை, 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற விஷயங்களில் கறார் காட்டுகிறது காசா. இதுவரை காசாவில் 651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 611 பேர் குணமடைந்துள்ளனர்.தற்போது 37 சிகிச்சையில் உள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடமும் இதேமாதிரியான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது காசா. அந்நேரத்தில் காசாவுக்குள் நுழைந்த மாநில அமைச்சர் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால் மக்களின் வற்புறுத்தலால் வேறுவழியின்றி அங்கிருந்து இருந்து வெளியேறிய சம்பவமும் நடந்தது. யார் வந்தாலும் கட்டுப்பாடு இதுதான் என சொல்லும் காசா தான் கடந்த வருடத்தில் இமாச்சலப்பிரதேச மாநில அளவில் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் பகுதியாகும்.