Karnataka Hijab Row | ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்குக் கல்லூரியில் அனுமதி: ஆனால்..? : பூதாகரமாக வெடிக்கும் விவகாரம்
கர்நாடக மாநிலம் குந்தாப்புராவில் உள்ள அரசு மகளிர் பியூசி கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குந்தாப்புராவில் உள்ள அரசு மகளிர் பியூசி கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறோரு வகுப்பில் அமர வைக்கப்படுவர். அவர்களுக்குக் கற்பித்தல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வர 4 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே பிப்.5 அன்று இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று (பிப்.7) கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறோரு வகுப்பில் அமர வைக்கப்படுவர். அவர்களுக்குக் கற்பித்தல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு இடைவெளைக்காக ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவிகள் வெளியே வந்தனர். அவர்கள் ’ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''உயர் நீதிமன்ற உத்தரவு வரும் வரை நாங்கள் ஹிஜாபைக் கழற்ற மாட்டோம். அவர்கள் (கல்லூரி நிர்வாகம்) ஹிஜாபுடன் எங்களை வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை. அதனால் வெளியே தனியாக அமர்ந்திருக்கிறோம். எங்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவில்லை. அதனால் வெறுமனே உட்கார்ந்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறும்போது, ''கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப் மற்றும் காவித் துண்டுக்கு அனுமதி இல்லை. கல்லூரியில் அனைத்து மாணவர்களும் சீருடை அணிய வேண்டும் என்று மாநில அரசு ஏற்கெனவே கல்லூரி நிர்வாகம் மூலம் தெரிவித்துவிட்டது. எல்லோரும் அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இங்கு எல்லோரும் சமம். அனைவரும் இந்தியத் தாயின் குழந்தைகள்'' என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ், ''கல்லூரி வளாகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மரியாதை நிமித்தமாகக் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சீருடையை அணிந்து வகுப்புகளை கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. எனினும் அவர்கள் தனியறையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்கின்றனர். மாணவிகள் சீருடை அணிவதைப் பின்பற்றி, வகுப்புகளை கவனிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
அரசு தொடர்ந்து சீருடை அணிந்துவந்தால் மட்டுமே அதாவது ஜிஹாப் அணிந்து வருவதைத் தவிர்த்தால் மட்டுமே வகுப்புகளுக்கு அனுமதி என்று தெரிவித்து வருவது மாணவர்களைக் கவலையடையச் செய்துள்ளது.