Karnataka High Court: கணவன் அத்துமீறினாலும் அது பாலியல் வன்கொடுமைதான் - கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி
கணவன்மீது புகார் அளிக்கப்பட்டதை பாலியல் வன்கொடுமைதான் என உறுதி செய்து ’பாலியல் வன்கொடுமை’ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவிட்டனர் கர்நாடக நீதிபதிகள்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன. இந்நிலையில் பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் அது குற்றம்தான் என ஒரு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு அசத்தி இருக்கிறது.
தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கணவன்மீது மனைவி புகார் அளித்திருக்கிறார். அதனை அடுத்து, இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “திருமணம் என்பது ஆண்களுக்கு எந்த மிருகத்தனத்தையும் செய்வதற்கான சிறப்பு உரிமையை வழங்கிடவில்லை. பாலியல் வன்கொடுமை செய்தது கணவனாகவே இருந்தாலும் அது வன்கொடுமைதான்” என தெரிவித்துள்ளனர்.
மேலும், கணவன்மீது புகார் அளிக்கப்பட்டதை பாலியல் வன்கொடுமைதான் என உறுதி செய்து ’பாலியல் வன்கொடுமை’ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவிட்டனர் கர்நாடக நீதிபதிகள். இந்த உத்தரவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
முன்னதாக, இடுப்பில் அணியப்படும் உள்ளாடை மீது ஆணுறுப்பை செலுத்தினாலும், பாலியல் வன்கொடுமைதான் என மேகாலையா உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு தெரிவித்தது.
கடந்த 2006-ம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டபோது வலி உணரவில்லை என தெரிவித்திருந்தார். ஆனால், உள்ளாடை அணிந்திருந்தபோதும் குற்றம்சாட்டப்பட்டவர் தனது பிறப்பு உறுப்பின்மீது தேய்தார் என தெரிவித்திருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சிறுமியின் பிறப்பு உறுப்பு சிவப்பு நிறத்தில் இருந்தது தெரியவந்தது. இதனால், அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில், உள்ளாடையை கழற்றாமல் ‘பாலியல் வன்கொடுமை’ செய்யப்பட்டார் என எப்படி முடிவு செய்வது என குற்றம்சாட்டப்பட்டாவர் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து தீர்ப்பு தெரிவித்த மேகாலையா உயர்நீதிமன்ற நீதிபதிகள், சம்பவம் நடந்தபோது அந்த சிறுமிக்கு வலி இல்லையென்றாலும், உள்ளாடை கழற்றப்படாமல் இருந்திருந்தாலும், அவரது பிறப்பு உறுப்பின்மீது ஆணின் பிறப்பு உறுப்பை வைத்து தேய்த்தது சட்டப்படி குற்றம் என தெரிவித்திருக்கிறது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 375(பி)-ன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. இந்த தீர்ப்பு பலரது வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பதிவாகி வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு இது போன்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்