எடியூரப்பாவிற்கு இரண்டாவது முறையாக கொரோனா
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்ரா, டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கடந்த மார்ச் 12-ந் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்த நிலையில், அவருக்கு கடந்த மூன்று நாட்களாகவே கடும் காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, கர்நாடகாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் ஏற்கனவே எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.