Soldier Missing: விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் மாயம்.. காரில் இருந்த ரத்தக் கறை.. காஷ்மீரில் பரபரப்பு
விடுமுறைக்காக ஜம்மு காஷ்மீரில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற ராணுவ வீரர் மாயமாகியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக் உருவாக்கப்பட்டது. அது, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், சட்டப்பிரிவு 370ஐ நீக்கி நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமைதி நிலவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாயமான ராணுவ வீரர்:
இந்த நிலையில், விடுமுறைக்காக ஜம்மு காஷ்மீரில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற ராணுவ வீரர் மாயமாகியுள்ளார். இது, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் காலாட்படை பிரிவைச் சேர்ந்த ரைபிள்மேன் ஜாவேத் அஹ்மத், ரமலான் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். நாளை பணியில் சேரவிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், அவர் மாயமாகியிருப்பது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் சந்தையில் இருந்து சில பொருட்களை வாங்க அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் ஆல்ட்டோ காரை ஓட்டி சென்றிருக்கிறார். இரவு 9 மணி ஆகியும் அவர் திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடத் தொடங்கினர்.
சந்தைக்கு அருகில் அவரின் கார் கண்டெடுக்கப்பட்டது. அதில், ரத்தக் கறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. காஷ்மீர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சிலரைக் கைது செய்துள்ளனர். 25 வயது ராணுவ வீரரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ராணுவ வீரரின் குடும்பத்தினர், அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக சந்தேகித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவரை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தனது மகனை விடுவிக்கக் கோரி தாயார் வெளியிட்ட வீடியோ மெசேஜில், "தயவுசெய்து எங்களை மன்னியுங்கள். என் மகனை விடுதலை செய்யுங்கள்.
மகனை விடுவிக்கக் கோரி கதறும் தாய்:
என் ஜாவேதை விடுதலை செய்யுங்கள். நான் அவரை ராணுவத்தில் வேலை செய்ய விடமாட்டேன். ஆனால். தயவுசெய்து அவரை விடுவிக்கவும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
மாயமான ராணுவ வீரரின் தந்தை முகமது அயூப் வானி கூறுகையில், "எனது மகன் லடாக்கில் பணியமர்த்தப்பட்டான். ஈத் முடிந்து வீட்டிற்கு வந்த அவர் நாளை மீண்டும் பணியில் சேரவிருந்தார். நேற்று மாலை மார்க்கெட்டில் பொருட்களை வாங்க வெளியில் சென்றான். அவரை சிலர் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர். அவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவுசெய்து என் மகனை விடுவிக்கவும்" என்றார்.
கடந்த காலங்களில் விடுமுறையில் வீட்டில் இருந்த பல ராணுவ வீரர்கள் அப்பகுதியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.