INS Brahmaputra: கடலில் சரிந்த இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா - துறைமுகத்தில் நடந்தது என்ன?
INS Brahmaputra: இந்திய கடற்படையின் ஏவுகணை தாங்கி போர்கப்பலான, ஐஎன்எஸ் பிரம்மபுத்ராவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
INS Brahmaputra: ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் கடும் சேதம் ஏற்பட்டுள்ள சூழலில், மாலுமி ஒருவரும் மாயமாகியுள்ளார்.
பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் பயங்கர தீ விபத்து:
இந்தியக் கடற்படைக் கப்பலான பிரம்மபுத்ரா, மும்பையில் உள்ள கடற்படைக் கப்பல் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்நது. அப்போது எதிர்பாராத விதமாக அதில் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தகவல் அறிந்ததும், மும்பை கடற்படை கப்பல்துறை மற்றும் துறைமுகத்தில் உள்ள மற்ற கப்பல்களின் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கப்பல் பணியாளர்களால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்திற்குப் பிறகு போர்க்கப்பல் ஒரு பக்கமாக கடுமையான சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஒரு பக்கமாக சரிந்துள்ள போர்க்கப்பலை, அதன் இயல்புநிலைக்கு கொண்டு வரமுடியவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
போர்க்கப்பலின் மாலுமி மாயம்:
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிற்பகலில், கப்பல் ஒரு பக்கம் (துறைமுகம் பக்கம்) கடுமையான சேதங்களை கண்டுள்ளது. எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், கப்பலை அதன் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியவில்லை. கப்பல் அதன் பெர்த்தில் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு இளைய மாலுமியைக் காணவில்லை என்றும், அவரை மீட்புக் குழுக்கள் தேடி வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரிக்க இந்திய கடற்படையால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கப்பலில் இருந்த பணியாளர்கள் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணை தீவிரம்:
ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தகவல் தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைத் தளபதிக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பிரம்மபுத்ரா பற்றி தகவல்கள்:
ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா என்பது உள்நாட்டிலேயே கட்டப்பட்ட 'பிரம்மபுத்ரா', ஏவுகணை தாங்கி போர்க்கப்பல்களில் முதன்மையானது. இது கடந்த 2000-வது ஆண்டில் கடற்படையில் இணைக்கப்பட்டது. 3 ஆயிரத்து 600 டன் எடையிலான இந்த கப்பல் 125 மீட்டர் நீளம் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 56கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.