இந்தியாவில் 24 மணிநேரத்தில் 1.26 லட்சம் நபர்களுக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1.26 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக, அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. நாட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1.15 லட்சம் நபர்களுக்கு புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக 1.26 லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 315 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 061 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் நேற்று ஒரு நாளில் மட்டும் 684 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 892 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலே அதிகபட்சமாக நேற்று மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 59 ஆயிரத்து 907 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனாவால் 322 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நாட்டிலே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநில பட்டியலில் மகாராஷ்ட்ரா உள்ளது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழ்நாடு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.